Friday, 31 August 2012

மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர்

பாகம் 1


மஹாத்மா காந்தியடிகள்

உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா அன்னல் காந்தியடிகள். உலக வரலாறு மஹாத்மா எனற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர். 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அவரது தந்தை காபா கரம்சந்த் காந்தி 25 வயதிலேயே அமைச்சரானவர். தாயார் பெயர் புத்திலிபாய்.


சிறுவயதில் 'அரிச்சந்திரா' நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது காந்திக்கு. அந்தப் பிஞ்சு வயதிலேயே அரிச்சந்திரன் கதாபாத்திரம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் அவருக்குள் விதைத்தது. காந்தி தொடக்கப்பள்ளியில் பயின்றபோது ஒருமுறை சோதனை அதிகாரி வந்தார் சில சொற்களைச் சொல்லி எல்லா மாணவர்களையும் எழுதச் சொன்னார். காந்தி ஒரு வார்த்தையை தவறாக எழுதியிருந்ததைப் பார்த்து அவருடைய ஆசிரியர் காந்தியின் காலை மிதித்துப் பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதும்படி சைகைக் காட்டினாராம். ஆனால் ஆசிரியரே தவறான வழிகாட்டிய போதிலும் அவ்வாறு செய்ய மறுத்து விட்டாராம் காந்தி. தொடக்கப்பள்ளியில்கூட அவர் காட்டிய நேர்மை வியப்பைத் தருகிறதல்லவா!!

அந்தக்காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் பரவலாக இருந்ததால் 13 ஆவது வயதிலேயே காந்திக்கு திருமணம் நடைபெற்றது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை அவர் மணந்துகொண்டார். கல்லூரிக் கல்வி வரை இந்தியாவிலேயே முடித்த காந்தி சட்டத்துறையில் பட்டம்பெற இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் தன்மகன் கெட்டுப்போய் விடுவான் என்று அஞ்சிய தாயார் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தார். மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துதந்த பிறகே காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதித்தார் தாய். செளகரியத்திற்காக சத்தியம் செய்யும் பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். ஆனால் சத்தியம் காப்பதற்காகவே பிறந்தவர் என்பதை அந்த இளம் வயதிலேயே வாழ்ந்து காட்டினார் காந்தி. தான் தாய்க்குக் கொடுத்த வாக்கை மீறாமல் ஒரு முழுமையான மனிதனாக 1891 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

மீண்டும் இந்தியா திரும்பி வழக்கறிஞர் தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. ஒரு வழக்குக் காரணமாக தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம் காந்திக்கு ஏற்பட்டது. 1893 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அந்தப் பயணம்தான் காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் அப்போது நிறவெறிக் கொள்கையும், இனஒதுக்கல் கொள்கையும் தலை விரித்தாடியது. அங்கு இந்தியர்கள் அவமானப்படுத்தப் படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டு திடுக்கிட்டுப்போன காந்தி அந்த அநீதிகளைக் கண்டு மனம் கலங்கினார். நம்மில் பெரும்பாலோர் அநீதிகளை கண்டு கலங்குவதோடு நின்று விடுவோம் ஆனால் காந்தி அதனை எதிர்க்க முற்பட்டார். தென்னாப்பிரிக்கவிலேயே தங்கி இந்தியர்களின் சம உரிமைக்காகப் போராட முடிவெடுத்தார்.

டர்பன் நகரில் நாட்டல் என்ற பகுதியில் ஒன்றல்ல இரண்டல்ல 21 ஆண்டுகள் தங்கி பல சமூக அரசியல் பரிசோதனைகளைச் செய்துப் பார்த்தார். அந்த முயற்சிகளின் மூலம் அவர் உலகுக்குத் தந்த பெரும்கொடைதான் 'சத்தியாக்கிரகம்' என்ற அகிம்சை அறவழிப் போராட்டம். தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் பயணம் செய்யும்போது ஒரு பெட்டியில் ஒரு வெள்ளையர் இருந்தாலும் அந்தப்பெட்டியில் கருப்பரோ, இந்தியரோ ஏறக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஒருமுறை ஆங்கிலேயர் இருந்த ஒரு பெட்டியில் காந்தி ஏறினார். உடனடியாக இறங்குமாறு அந்த ஆங்கிலேயர் சொன்னதுக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியை உதைத்து வெளியில் தள்ளினார் அந்த வெள்ளைக்காரர். இந்த மாதிரி பல அவமானங்கள் ஏற்பட்டபோதும் அகிம்சை வழியில் உலகை வெல்லலாம் என்ற அவரது மன உறுதி சற்றும் குலையவில்லை. இறுதியில் காந்தியம்தான் வென்றிருக்கிறதுஏனெனில் எந்த புகை வண்டி நிலையத்தில் அவர் உதைத்துத் தள்ளப்பட்டாரோ அதே நிலையத்தில் இன்று காந்தியடிகளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1915 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய காந்தி சபர்மதி நதிக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு வாழத் தொடங்கினார். காந்தியை இந்திய அரசியலில் ஈடுபடுத்தினார் கோபால கிருஷ்ண கோகலே என்ற தலைவர். முதலாம் உலக்போரின்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்க உதவினார் காந்தி. அதற்குக் காரணம் போர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பியதுதான். ஆனால் பிரிட்டிஷ் அரசோ போர் முடிந்த பிறகு ரெவ்ளட் என்ற சட்டம் மூலம் இந்தியர்களின் சுதந்திர உணர்வையும், எதிர்பார்ப்பையும் நசுக்கியது. அதனை நம்பிக்கைத் துரோகம் என்று கருதிய காந்தி வெகுண்டெழுந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். வரி செலுத்த மறுக்குமாறு வற்புறுத்தினார். பல உயிர்களை பலி வாங்கினாலும் ஒத்துழையாமை இயக்கம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்தியின் தலைமையில் டெல்லியில் மாபெரும் தீ வளர்த்து விலையுயர்ந்த ஆடைகள் எரிக்கப்பட்டன. அதைப்பார்த்து வேதனைப்பட்ட காந்தியின் ஆங்கிலேயே நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் அந்தத் துணிகளை எரிப்பதற்கு பதில் ஏன் அவற்றை ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது? என்று கேட்டார். அதற்கு காந்தி சொன்ன பதில் ஏழைகளுக்குக்கூட தன்மானம் உண்டு. 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி பூர்னஸ்வரஜ் அதாவது முழுச்சுதந்திரம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. அதற்கு அடுத்த ஆண்டு சத்தியாகிரகத்தின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் காந்தி. அப்போது உப்புக்குகூட வரிவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி வரி அதிகமில்லையென்றாலும் ஏழைகளை அது வெகுவாக பாதித்தது. எனவே அந்த வரியை எதிர்த்து புகழ்பெற்ற 'தண்டியாத்திரை' மேற்கொண்டார் காந்தி.

அகமதாபாத்திலிருந்து 78 தொண்டர்களுடன் புறப்பட்டு 24 நாட்களில் சுமார் 300 கிராமங்களை நடந்தே கடந்து தண்டி கடற்கரையை அடைந்தார். அங்கு சட்டத்தை மீறி அவர் கடற்கரையிலிருந்து சிறிதளவு உப்பைச் சேகரித்தார் முன் அறிவிப்பு செய்துவிட்டுத்தான் அவர் அந்த உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். அவருடைய மனோதிடத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி சற்று தடுமாறிப் போனது உண்மைதான். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் அவரை சிறையில் அடைத்தது. அவரை மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக திரண்டியிருந்த சுமார் 60000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தாங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக ஒரு விரலை கூட உயர்த்தாமல் அகிம்சை காத்தனர் பலர். பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச்செய்த பல சம்பவங்களுள் அந்த உப்பு சத்தியாகிரகம் மிக முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காந்திக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்படவே ஒத்துழையாமை இயக்கத்தை மீட்டுக்கொண்டார் காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார் ஆனால் ஏமாற்றத்தோடு திரும்பினார்.

பொருத்தது போதும் என்ற பொங்கியெழுந்த காந்தி 1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கி உடனடியாக சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அன்றிரவே பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்தது. ஆனால் சுதந்திர வேட்கை நாடு முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு 1945 ஆம் ஆண்டு லண்டனில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை வன்மையாக எதிர்த்து வந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆட்சி பதவி இழந்தது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது. தொழிற்கட்சியின் தலைவர் கிளமெண்ட் அட்லி இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தைக் கண்டு மனமிறங்கி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடுவெடுத்தார். ஆனால் எல்லாம் கைகூடி வந்த நேரம் இந்தியாவை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்றப் பிரிவினைவாதக் கோரிக்கை தலையெடுத்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.

காந்திக்கு அதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும் பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கொட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர். ஆனால் அந்தச் சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர்

பாகம் 2
சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாகப் பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்தப் பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள். அவர் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். சொந்த நிலம், வீடு, சொத்து, வியாபாரம், வேலை, கல்வி, நண்பர்கள் என அனைத்தையும் விட்டு தங்கள் எதிர்காலத்திற்கு அஞ்சி மக்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையை கடந்தபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுதந்திரம் கிடைத்தும் அந்த மதக்கலவரக் கொடுமையில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.



தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதுகூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும் அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே ஆகியிருந்த நிலையில் அதனைப் பெற்றுத் தந்தவரின் உயிருக்கு சுதந்திரம் தர எத்தனித்தான் நாதுராம் கோட்ஸே என்ற ஒரு மதவெறியன். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள். சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பை நிராகரித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்து என்ற அந்தப் பின்னனியில் ஜனவரி 30ந்தேதி இன்னொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அன்றைய தினம் காந்தியடிகளை குனிந்து வணங்குவதுபோல பாவனை செய்துவிட்டு நிமிர்ந்தான் அந்த மதவெறியன். அவனை வணங்குவதற்காக கைகளைக் கூப்பினார் காந்தியடிகள். சற்றும் சிந்திக்காமல் தன் கைத் துப்பாக்கியைக் கொண்டு கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கிச் சுட்டான் அவன். மூன்று குண்டுகள் அன்னலின் மெலிந்த தேகத்தைப் பதம்பார்த்தன. கைகள் கூப்பிய நிலையிலேயே ஹேராம்...ஹேராம் என்ற வார்த்தைகளை உதிர்த்து சரிந்தார் காந்தியடிகள். இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு பிரிந்தது அந்தத் தேசப்பிதாவின் உயிர். தன் கடைசி மூச்சுவரை அகிம்சையைப் போதித்த அந்த மாமனிதனுக்கு அமைதியான மரணத்தை வழங்க முடியாத கலங்கத்தை இன்றுவரை சுமந்து நிற்கிறது இந்தியா.

தன் வாழ்நாளில் தீண்டாமை ஒழிப்புக்காக அரும்பாடுபட்டார் காந்தியடிகள். தீண்டத்தகாதவர்கள் எவரும் கிடையாது என்று கூறிய அவர் தீண்டாமையைக் கடவுளுக்கு எதிரான பாவச்செயல் என்றும் சாடினார். ஒருமுறை தனது ஆசிரமத்தில் தீண்டத்தகாத ஆசிரியரையும், அவரது குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டபோது அவரது மனைவிகூட அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். தீண்டாமையை இந்தியாவின் அவமானம் என்று கூறிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? அவர்கள் இந்த ஆசிரமத்தில் தங்குவதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ இந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறலாம் என்று தனது மனைவியைப் பார்த்து கூறினார். கஸ்தூரிபாய் வேறு வழியின்றி அமைதியானார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஹரிஜன்ஸ் என்று பெயரிட்டார் காந்தியடிகள். அதன் பொருள் கடவுளின் பிள்ளைகள் என்பதாகும்.

தனது சத்திய சோதனை என்ற நூலில் காந்தியடிகள் புகழ்பெற்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களை அவர்களில் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையைக் கழுவுமாறு நாம் சொல்வதற்கு முன் இந்துக்களாகிய நாம் நம் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையை கழுவ வேண்டாமா? என்று தீண்டாமைக் குறித்து ஆதங்கத்தோடு கேள்வியெழுப்பினார் காந்தியடிகள். அவரது போராட்டங்களால் தீண்டத்தகாதவர்களை ஒரு தனிச்சமூகமாகக் கருதி அவர்களுக்கு தனி ஓட்டுரிமை வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆனால் அவ்வாறு செய்வது பிரச்சினையை இன்னும் மோசமாக்கும் என்று நம்பிய காந்தியடிகள் துணிவான ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ஹரிஜனங்கள் தனிச்சமூகம் என்ற திட்டத்தைக் கைவிடா விட்டால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக பூனா சிறையிலிருந்தவாறே அறிவித்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் பூனா ஒப்பந்தத்திற்கு இணங்கியது. அதன்படி இனிமேல் இந்துக்களில் பிறப்பின் காரணமாக எவரும் கீழ்சாதி என்பது கிடையாது என்று அறிவித்து தனது உண்ணாவிரத்தை முடித்தார் காந்தியடிகள்.

காந்தியடிகள் எவ்வளவு தெளிவான சிந்தனையுடயவர் என்பதற்கு இன்னொரு சம்பவம் தன் ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் வேதனையைப் பார்த்து கலங்கிய அவர் அதனை கொன்று விடுமாறு கூறினார். பசுவைக் கொல்வது பாவம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே சில தீவிர இந்துக்கள் அவரைப் பாவி என்று வசைபாடினர். ஆனால் வேதங்களை விட ஓர் உயிரின் வேதனைதான் அன்னலின் கண்களுக்குப் பெரிதாகப்பட்டது. 1922 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியடிகளை சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தபோது அவர் பைபிள், குர்ரான் போன்ற நூல்களையும், இந்து வேதங்களையும் படித்தார். தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். 1925ல் காங்கிரஸ் தலைமைத்துவத்திலிருந்து விலகிய காந்தியடிகள் அடுத்த மூன்று ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று இராட்டினம் மூலம் சுய தொழில் செய்வதைப் பற்றியும், ஒத்துழையாமைப் பற்றியும் மக்களிடம் பேசினார்.

அவ்வாறு ஒருமுறை பேசியபோது கிராம மக்கள் சேர்ந்து காந்தியடிகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அப்போது அவர்களைப்பார்த்து இந்த மலர்மாலைக்காக நீங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் 16 பேர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி தர உதவும் என்று கூறினார். கட்டாயத்தின் பேரில் தான் பால்ய விவாகம் செய்து கொண்டாலும் அதனை வன்மையாக எதிர்த்தார் காந்தியடிகள். பிள்ளைகளின் வாழ்க்கை குலைக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். விதவைகளைப் பார்த்து மறுமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் மறுமணம் செய்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று முழங்கினார். உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவரும் நாக்கைக் கட்டுப்படுத்தினால் உலகில் பாதி பிரச்சினைகள் ஒழிந்துவிடும் என்று நம்பிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் திங்கள் கிழமைகளில் மவுன விரதம் இருந்தார். ஒரு மணிநேரம்கூட மவுனமாக இருப்பது நம்மில் பலருக்கு முடியாத காரியம். ஆனால் அரசியலில் ஈடுபட்டிருந்தபோதுகூட, எவ்வளவு பெரிய நபர்களை சந்திக்க வேண்டியிருந்தபோதும்கூட திங்கள் கிழமை மவுன விரதத்தைக் கைவிட்டதில்லை காந்தியடிகள்.

நாடு முழுவதும் இரயில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் காந்தியடிகள் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தார். சாதரண மக்கள் சிரமப்படும்போது தனக்கு செளகரியங்கள் தேவையில்லை என்பதுதான் அவரது எண்ணம். அதே எண்ணம் அவரது ஆடையிலும் பிரதிபலித்தது. இந்தியர்களின் வறுமை நிலையைப் பார்த்து மனம் வெம்பியதால்தான் காந்தியடிகள் நான்கு முழத் துண்டை மட்டும் ஆடையாக அணியத் தொடங்கினார். இப்படி தன் மக்களுக்காக துயருற்று அவர்கள் அனுபவித்த வேதனைகளை தானும் அனுபவித்து மக்கள் நலனை மட்டுமே குறியாக கொண்டு செயலாற்றிய வேறு ஒரு தலைவர் உலக வரலாற்றில் இருந்திப்பாரா என்பது சந்தேகமே. உண்மை பேசுவதைவிட ஒரு சிறந்த பண்பு இருக்க முடியாது என்று உளமாற நம்பிய காந்தியடிகள் My Experiments with Truth என்ற புகழ்பெற்ற சுயசரிதையையும் எழுதினார். முழுமையாகத் தெரிந்துகொள்ள 'சத்திய சோதனை' என்ற அந்த நூலை படித்துப் பாருங்கள்.

உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். உலகில் ஏற்பட்ட எந்த புரட்சியும் ஆயுதம் ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், உயிர்பலி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. அந்த விதியை மாற்றி அமைத்தவர் அன்னல் காந்தியடிகள். கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம் என அகிம்சை வழியிலேயே ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் காந்தியடிகள். அதனால்தான் அன்னல் காந்தியடிகளைப் பற்றி சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர் லீ குவான் யூ ஒருமுறை உரையாற்றும்போது நான் ஒரு இந்திய போப்பாக இருந்திருந்தால் மஹாத்மா காந்திக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியிருப்பேன் என்று கூறினார். இப்படி உலக தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனுகுலமும் காந்தியடிகளை போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணம் அவர் உலகுக்குத் தந்த இரண்டு மாபெரும் கொடைகளான அகிம்சை, வாய்மை.

இந்த அவசர உலகில் அகிம்சைக்கும், வாய்மைக்கும் இடம் உண்டு என்பதை வாழ்ந்து காட்டியதால்தான் உலகம் அவரை மட்டும் 'மஹாத்மா' என்றழைக்கிறது. அந்த ஒப்பற்ற ஜீவன் பின்பற்றிய அகிம்சையையும், வாய்மையையும் பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமையாகும். 

Read more: http://urssimbu.blogspot.com/2011/08/2.html#ixzz257badim5

அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)

SONY உருவான கதை 

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. 

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும். 

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.  

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.  
1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம்

Thursday, 30 August 2012

புத்தரின் வாழ்வும், போதனைகளும்

 


"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் (புத்த பூர்ணிமா) கொண்டாடுகின்றனர்.

புத்தரின் பிறப்பு :
கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. 
புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.
சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.
துறவறம் :
உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.
துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.
பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :
பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.
அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :
ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.
கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :
புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.
"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :
1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.
நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.
இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.
அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :
1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.
2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.
3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.
4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.
5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.
6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.
8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.
சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.
அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

Sunday, 19 August 2012

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 

 

இந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர். உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.
1893ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி. அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.

ஆனால், 1921 மே மாதம் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஐ.சி.எஸ் என்ற பதவியை தூக்கி எறிந்து விட்டு லண்டனில் இருந்து இந்தியா வந்து காந்தியை சந்தித்தார். அவர் கல்கத்தாவின் தலைவர் சித்ரன்தாஸ்குப்தாவிடம் அனுப்பி வைத்தார். தாஸ் காந்தியை போன்றே செல்வாக்கு உடையவர். அவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். 25 வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
போஸ் காங்கிரஸில் இணைந்த நேரம், முதல் உலக போரில் பிரிட்டிஷுக்கு ஆதரவாக கலந்து கொண்ட இந்திய வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதாக அறிவித்தார். இதனை முறியடிக்கும் பணி போஸிடம் வந்தது. 1921 நவம்பர் 17ஆம் தேதி இளவரசர் கப்பல் மூலம் பம்பாய் வந்து இறங்கினார். பம்பாய் நகரம் வெறிச்சோடியிருந்தது. கல்கத்தாவில் காக்கா, குருவிக்கூட அவரை வரவேற்க வரவில்லை. வெள்ளைத் தோல்களுக்கு ஏமாற்றம், அவமானம். சாதித்து காட்டியது போஸ். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்களிடம் ஆதரவு பெற்ற போஸ் சொன்னால் கல்கத்தாவில் துரும்புக்கூட அசையாது. இதில் கடுப்பான ஆங்கில அரசு போஸை கைது செய்து சிறையில் அடைத்து வைத்தது. முதல் சிறை வாசம். போஸ் மட்டுமல்ல தாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த தாஸுக்கும்-காந்திக்கும் கருத்து வேறுபாடு. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயராஜ்ய கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர ஃபார்வர்ட் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார். கல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் சுயராஜ்ய கட்சி வென்றது. போஸ் மேயராக பதவியேற்றார். 1925 ல் தாஸ் காலமான போது சிறையில் இருந்த போஸ் நொறுங்கிப் போனார். தனக்கு எல்லாம் முடிந்து போய்விட்டது என எண்ணினார். 1926 ல் நடந்த வங்க சட்டசபை தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். மக்கள் செய்த போராட்டத்தின் விளைவாக 1927 மே 17ல் விடுதலை செய்யப்பட்டவர். எலும்பும் தோலுமாக சிறையை விட்டு வெளியே வந்தார்.
முன்பை விட தீவிரமாக செயல்பட்டார். 1928 ல் கல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்து பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். தன்னை எதிர்க்க ஒருவனா என கோபமான காந்தி இது மாநாடேயில்லை என விமர்சனம் செய்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து விடுதலை சங்கம் என்ற பெயரில் காங்கிரஸில் இருந்தபடி இயக்கம் நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனுவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது, அங்கு எங்களுக்கு வேலையில்லை என காங்கிரஸ் ஜனநாயக கட்சியை சீனுவாச அய்யரை தலைவராக கொண்டு தொடங்கி காந்திக்கு புளிப்பு தந்தார்.
1930 ல் நடந்த கல்கத்தா மாநகர மேயர் தேர்தலில் நின்று சுபாஷ் வெற்றி பெற்று மேயரானார். 1931ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்தபோது போஸ் சிறையில் இருந்தார். காந்தி உட்பட பலர் உள்ளே இருந்தனர். வெளியே வந்து காந்தியின் தீவிர போராட்டத்தை ஆதரித்தார். கடைசியில் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி போரட்டம் புஸ்ஸானது. அதைப் பற்றி காந்தியிடம் விவாதிக்க போன போஸ், அப்படியே கராச்சியில் நடந்த மாநாட்டுக்கு ரயிலில் சென்றார். மாநாட்டின்போது, மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்வை தூக்கில் ஏற்றியது பிரிட்டிஷ் அரசு. அதை மாநாட்டில் காந்தி கண்டிக்கவில்லை. இதை எதிர்த்தார் நேதாஜி.
13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியட்னா போனவர் அப்படியே ஐரோப்பிய நாடுகளான செக்கஸ்லோவியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
1938 ஜனவரியில் தாயகம் திரும்பினார். அதே ஆண்டு ஹரிபுராவில் காங்கிரஸின் 51வது மாநாடு. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போஸை 51 காளைகள் பூட்டிய வண்டியில் அழைத்து சென்றனர். போஸ் பேரியக்கத்தின் தலைவரானார். நேருவுடன் இணைந்து பல காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சினார். இது காந்தி ஆதரவாளர்களை வெம்ப வைத்தது. 1 ஆண்டு முடிந்து 1939ல் கவுகாத்தியில் நடந்த மாநாட்டில் பேரியகத்தில் மீண்டும் தேர்தல் வந்தது. தலைவர் பதவிக்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளராக நிறுத்தினார் காந்தி. எதிர் வேட்பாளர் போஸ். காந்தியின் ஆதரவாளர்கள் சுபாஷை மண் கவ்வ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். தேர்தலில் நானே நிற்கிறேன் என எண்ணிக்கொள்ளுங்கள் என்றார் காந்தி. ஆயினும், போஸ் தேர்தலில் சீதாராமையாவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்வானார் . காங்கிரஸ் என்றால் காந்தி என்ற பிம்பத்தை உடைத்தெரிந்து காந்தியின் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியை உருவாக்கினார் சுபாஷ். அப்போதுதான் சுபாஷின் முழு திறமை பற்றி உலகத்திற்கு தெரிந்தது .
 
 
பட்டாபி தோற்றது நானே தோற்றது போல இனி எனக்கு இவ்வியக்கத்தில் என்ன வேலை என மிரட்டல் விடுத்தார். காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற சரியான சந்தர்ப்பம் என கருதி காந்தியை அணுகி இரண்டாம் உலகபோரில் பிரிட்டிஷாருக்கு உதவக்கூடாது என கேட்டார் சுபாஷ். காந்தியோ மறுத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று பிரிட்டிஷ் படைக்கு உதவ வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்தார். மக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு, காந்திக்கு கறுப்பு கொடி காட்டினர் மக்கள். காரி துப்பினாலும் அசராதவர்கள் தானே காங்கிரஸார். பிரிட்டிஷ் படைக்கு ஆதரவு தந்தனர்.
துவலவில்லை சுபாஷ். பிரிட்டிஷ் படைக்கு எதிர்ப்பான நாடுகளை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என எண்ணி வீட்டு காவலில் இருந்து 1941 ஜனவரி 17 ந் தேதி மாறு வேடத்தில் இந்தியாவில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். ஜெர்மனி ஹிட்லர், இத்தாலி முசோலினி ஆகியோரிடம் உதவி கேட்டார். அங்கு இந்திய சுத்திர போராட்ட தலைவர்கள் சிலரின் நம்பகமான ஆதரவு கிடைக்க 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு என தனி கொடியை உருவாக்கி ஜனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆக்டோபஸ் நாடான பிரிட்டிஸ் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது. மனம் தளரவில்லை இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்ததாக கொன்று குவித்தது பிரிட்டிஷ் படை. இந்திய தேசிய படை தோல்வியை தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்து விட்டதால் போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை. இதனால் வேதனையின் உச்சிக்கே போனார் சுபாஷ். அவரின் திறமை அறிந்து அவரை காக்க ஜப்பான் முடிவு செய்தது. இரண்டு பேர் செல்லும் விமானத்தில் அவரை அழைத்துக்கொண்டு ரஷ்யா சென்றார்கள்.
1945 ஆகஸ்ட் 12 ந் தேதி விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் நேதாஜி இறந்து விட்டார் என உலகத்திற்கு தகவல் சொன்னது ஜப்பானிய அரசு. எப்படி என்பது இன்று வரை மர்மமாகவேயிருக்கிறது. மர்மத்தை கலைய சுதந்திரத்திற்கு பின் பல கமிட்டிகள், பல ஆய்வுகள் இந்திய அரசு செய்தது. இதுவரை யாராலும் உண்மையை கண்டறிய முடியவில்லை. உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று வரை மர்மம் தொடர்கிறது.

அன்னை தெரசா

 

"For 20 years, I have dreamt of having this role, and I knew that Mother Teresa would not have been displeased," said Ms Hussey. 

அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன்
.

பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம்.
பிறந்த தேதி 26-08-1910
இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin).
செல்லப்பெயர் : கோன்ஸா
தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin).
தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன).
தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai)
தாயின் தொழில் : வீடு, குடும்பம் மற்றும் கடவுள் இந்த மூன்றும் தான் இவரது உலகம்.
உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா (Aga) மற்றும் அண்ணன் லாஸர் (Lasar).

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார்
. அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு ‘மடை திறந்த வெள்ளம் போல்’ காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார் ஆக்னஸ்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது.

குடும்ப வருமானம் : தன் கணவனின் இறப்பிற்கு பிறகு பெர்னாய் தனக்கு தெரிந்த மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அலங்கார ஆடைத் தயாரித்து விற்று மற்றும் ஸ்கோப்ஜி நகரின் முக்கியமான பாதிரியார் ஜாம்பிரான் கோவ்க், பெர்னாயின் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து குழந்தைகளின் கல்விக்காக சில உதவிகளை செய்தார். தனது 12-ம் வயதில் தனது ‘சமூகச் சேவை’ செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.

ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்தல்
உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல்
பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு உதவி செய்தல்
தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்
மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல்
இதைப்பற்றி பள்ளிக்குச் செல்லும் முன் தன் தாயாரிடமும் பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு வருகின்ற வழியில் பேசுவார். இதைப்பற்றி பலரிடமும் விசாரிக்கும் போது ‘லொரெட்டோ சகோதரிகள்’ (Loreto Nuns)  என்ற அமைப்பு இருப்பதை அறிந்தார். அவர்கள் மூலம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ‘சமூக சேவை’ செய்வதை பற்றி அறிந்தார்.

சமூக சேவை செய்வதே முடிவாகக் கொண்ட அவர் 1923-ம் ஆண்டு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கின்ற பெண்களுக்கான சமுதாய இயக்கமான Sodality of Children of Mary எனற அமைப்பில் சேர்ந்தார். இதனை ஆரம்பித்தவர் பாதிரியார் ஜாம்பிரன் கோவிக் (Jambiran Covic) ஆவார். இந்த அமைப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே இந்த அமைப்பின் முக்கிய ‘கருப்பொருளாக’ மாறினார். தனது சேவையின் மூலம் ‘அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடிக்க’ ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் ‘மேற்கு வங்காளம்’ சென்று திரும்பிய சகோதரிகளை சந்டிக்கலானார். அப்போது அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அனைத்து விசயங்களையும் திரட்டினார். இந்தியாவின் மீதான ‘கனவுகள் விரிய அரம்பித்தன’. உடனே பாதிரியார் ஜாம்பிரனிடம் சென்று பேசினார். பாதிரியாரின் பதில், ‘உனது முடிவு இதுதான் என்றால் நல்லது, உன்னுடைய தாயாரிடம் அனுமதி வாங்க வேண்டும்’ என்றார். அன்று இரவே தாயாரிடம் பேசினார். தாயாரின் முடிவு  சாதகமாகவே அமைய, தாயின் அனுமதியோடு சேவையில் ஈடுபட தொடங்கினார். அப்போது இராணுவத்தில் பணியாற்றி வந்த தனது அண்ணன் லாகஸிற்கும் கடிதம் எழுதினார். ‘கன்னியாஸ்திரியாகப் போவதற்கு உறுதியாக இருக்கிறாயா?’ என்றார் லாகஸ். தனது சமூக சேவை மீதுள்ள பற்று, தனது அண்ணனின் கேள்விக்கு இவ்வாறு பதில் கூறினாள். “நீ இரண்டு மில்லியன் வீரர்களை நிர்வகிக்கும் மன்னனுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறாய். நான் உலகையே நிர்வகிக்கும் கடவுளுக்குச் சேவை செய்யப்போகிறேன்”.

தனது 18-ம் வயதில் 12 அக்டோபர், 1928-ம் ஆண்டு ராத்ஃபர்ன்ஹாம் (Rathfarnham) என்று அழைக்கப்படும் அயர்லாந்தில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ (Loreto Abbey) என்கிற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை ஆங்கிலப் புலமை இல்லாத அவர் மிகக் குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேச எழுத புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டார். அடுத்த கட்டமாக ‘ஒரே தேவை சேவை’. பாரபட்சம் இல்லாமல் குழந்தை, நோயாளி, முதியவர், ஏழைகள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இறுதியாக வங்காளத்தைச் சென்றடைய விரும்பினார். ஆனால் நிர்வாகம் தயக்கம் காட்டியது. ‘இவ்வளவு திறமையான பெண்ணான உன்னை அனுப்ப எங்களுக்கு மனம் இடம் கொடுக்க வில்லை’. அவளது விடாப் பிடிவாதத்தின் காரணமாக இந்த ‘இளம் புயலை’ வங்காள மாநிலம், கல்கத்தா நகருக்கு அனுப்புவதற்கு சம்மதித்தது.

1929-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையை வந்தடைந்தார். வந்த சில நிமிடங்களிலேயே கத்தோலிக்க சபை ஒரு கட்டளையை பிறப்பித்தது. ‘சட்ட விதிகளின் படி’ புதிதாக வந்து சேர்பவர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று. அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர். அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. ‘காசநோய்’ காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவர்களது நினைவாக தனது பெயரை “தெரசா” என்று மாற்றிக் கொண்டார்.



கல்கத்தாவில் சில நாட்கள் தங்கி இருந்த தெரசா அவர்களுக்கு அங்கு நிலவிய வறுமையான சூழல், ஏழைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பசியுடன் காத்திருக்கும் குழந்தைகள், சாக்கடை அருகிலேயே சமையல், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று வியாதிகள் ஆகியவைகள் அவரது மனதை மிகவும் பாதித்தது. இந்த சூழ்நிலையில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் ஆசிரியர் பணி  நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வரலாறு, புவியல் பணி காலி இடங்களாக இருந்தன. தெரசாவின் ஆர்வம்  காரணமாக அந்த பாடங்களுக்கு ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். தெரசாவின் உதடுகளில் புன்னகை திரும்பி இருந்தது. உற்சாகம் கொப்பளிக்க பாடம் சொல்லி கொடுக்க தொடங்கினார். பள்ளிக்கு ஏற்ற ஆசிரியையாகவும், குழந்தைகள் மீது அன்பாகவும், பாசத்தோடு இருந்தாலும் படிப்பு, பாடம் மற்றும் பழக்க வழக்கம் என்று வந்து விட்டால் கண்டிப்பான ஆசிரியையாக மாறி விடுவார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய உடனேயே அவரின் மனதில் தோன்றிய எண்ணங்கள்,
O இந்தியா தான் என் தாய்நாடு
O இந்தியா தான் என் வாழ்க்கை
O இந்தியா தான் என் எதிர்காலம்
இதற்கு கூடுதலாக “இந்தி மொழி” முக்கியமானதாக அமைந்தது. இதனையும் மேலோட்டமாக கற்றுக் கொண்டார்.

இந்த சமயத்தில் மீண்டும் கல்கத்தாவிற்கே பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கு கல்வியோடு சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய ஆரம்பித்தாள். பள்ளிக்கூடம், குடிசை மக்களுக்கு சேவை என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்த தெரசாவின் வாழ்க்கை குறுகிய காலத்தில் ‘பள்ளி முதல்வர்’ தெரசாவக மாறினார். பள்ளி முதல்வராக பணியாற்றிய காலத்திலேயே, 1940-ம் ஆண்டு கல்கத்தாவில் வசித்து வந்த பாதிரியார் செலஸ்டி வான் எக்செம் (Celeste Van Exem) என்பவரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். பதினேழு ஆண்டுகள் அந்தப் பள்ளியிலேயே பணியாற்றிய தெரசா, இதில் ஏராளமான நல்ல அனுபவங்களைப் பெற்றார்.

1942-43-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி மக்கள் திண்டாடினார்கள். பசிக்கொடுமை தாங்காமல் பலமுதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், இன்னொரு புறம் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. இந்த சமயத்தில் முஸ்லிம் லீக் என்கிற கட்சி இயக்கம் உருவானது. இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் வலுத்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சிந்திக்க ஆரம்பித்தார்!!! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்த விலகுவதாக முடிவு செய்த தெரசா தனது ராஜினாமா கடிதத்தை பேராயர் மூலமாக ரோமுக்கு அனுப்பினார். நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இறுதியாக ஏப்ரல் 12, 1948 அன்று உத்தரவாதக் கடிதம் வந்துவிட்டது. “இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை” – உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா.

ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்’. இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறிய போது. வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார்.

தன்னை “செவிலியர்” பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார். தனது பயிற்சி காலங்களில் மருத்துவர்கள் தெரசாவைப்பற்றி கூறியது – மருத்துவப் பயிற்சிக்குத் தேவையான மூன்று குணங்களான மிகுந்த உற்சாகம், ஆர்வம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்றுள்ளார் தெரசா.

தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. அவர்கள் அனைவருமே லொரேட்டாவில் முன்னாள் மாணவிகள். சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, முதலில் குடிசை வாழ் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவோம் என்று நினைத்தனர். 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார். “விரைவில் இந்த பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.

நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த ‘கோர சம்பவத்தை’ அனுபவித்த அன்னை தெரசா “சிறய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார். அரசாங்கமே முடியாமல் விட்டு வைத்துள்ள சூழ்நிலையில் “கடுமையாக முயற்சி செய்தால்” சாத்தியமாகி விடும் என்று தனக்குத்தானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று “உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்” என்று உதவிக் கேட்டார்.

அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற “நிர்மல் ஹ்ருதய்” என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன்  பெயர்தான் பின்னாளில் “காளிகட் இல்லம்”.

செப்டம்பர் 23, 1955-ம் ஆண்டு முதன் முறையாக சிசுபவன் ஆரமப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டி மற்றும் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். இங்கு இலவசமாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கு “காந்தி பிரேம் நிவாஸ்” என்று பெயரிடப்பட்டது. மேலும் “தொழுநோயாளிகளின் தினம்” என்ற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.

தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

சேவைக்காக உலகம் ஒரு சுற்றுப் பார்வை :
•  1963-ல் ஏழைச் சிறுவர்களுக்கான பிரத்யோக பள்ளிக்கூடம் ஜீலியன் ஹென்றி மற்றும் பிஷப் ஆல்ஃப்ரட் ஆகியோரது உதவியுடன் கட்டப்பட்டது.
•  1965-ல் வெனிசூலாவில் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்தார். குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் சென்று தங்கி சேவை செய்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், சிறைக்கைதிகள் மற்றும் அன்புக்கு ஏங்கும் அனாதைக் குழந்தைகள் ஆகியோர்க்கு சேவை செய்தார்.
•  1970-ல் ஐந்து கன்னியாஸ்திரிகளுடன் ஜோர்டன் சென்று அங்குள்ள அகதிகளுக்கு பணிவிடை செய்தார். அதே ஆண்டில் இலண்டன் சென்று அங்கு சாலையோரத்தில் மிகவும் மோசமான நிலமையில் வாழ்ந்தவர்களுக்கு உதவி செய்தார்.
•  1971-ல் மேற்கு பாகிஸ்தானில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஆதரவற்ற பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சிறு தொழில்களையும் கற்றுக் கொடுத்தார்.
•  1973-ல் எத்தியோப்பியாவுக்குச் சென்று அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். அதே ஆண்டு ஜோர்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரீஷியஸ், இஸ்ரேல், பெரு, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தனது சேவை மையங்களை ஆரம்பித்தார்.
•  1977-ல் ஆந்திரப்பிரதேசம் கடும் புயலால் தாக்கப்பட்ட போது அங்கு தெரசாவும், அவரது சகோதரிகளும் விரைந்து சென்று உதவி செய்தனர்.
•  1978-ல் தனது சொந்த ஊரான ஸ்கோப்ஜிக்கு யூகோஸ்லேவிய அழைப்பின் பேரில் சென்றார்.
•  1981-ல் ஜப்பான் ஃபேமில் லைஃப் அசோசியேஷன் என்கிற அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று டோக்கியோவில் தனது சேவை மையத்தை ஆரம்பித்தார்.
•  1985-ல் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
•  1988-ல் ரஷ்யா, க்யூபாவுக்குச் சென்று சேவை மையங்களை ஆரம்பித்தார். அதே ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற தெரசா  ‘எனக்கு வெள்ளை, கறுப்பு, பச்சை மற்றும் மஞ்சள் எனகிற எந்த வித நிற பேதமும் கிடையாது. நாம் எல்லோரும் அன்பைப் பெறுவதற்காக, அன்பு செலுத்துவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்’ என்று பேசினார்.
•  1991-ல் அமெரிக்கா மற்றும் ஈராக் அதிபர்களுக்கு வளைகுடாப் போரை நிறுத்த வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
•  1992-ல் பிரதமர் சதாம் உசேன் அழைப்பின் பேரில்  ஈராக் சென்று மறு நிர்மாண நடவடிக்கையில் பங்கு கொண்டார்.
உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.
மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா.

செப்டம்பர் 5, 1997-ம் ஆண்டு அதிகாலையிலேயே விழித்த அவர் ‘நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது’ என்று முனகியபடியே பேசினார். தெரசாவுக்குச் சிகிச்சை அளித்துவரும் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்தார். சிறதளவு முன்னேற்றம் ஆனாலும் பேசுமளவுக்கு கூட தெம்பில்லை. அன்று இரவு 9.30 மணிக்கு ‘நெஞ்சு வலிக்கிறதே’ என்று மெல்லிய குரலில் மீண்டும் முனகினார் தெரசா.  “கடவுளே இவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பிராத்தித்தார்கள், பதறினார்கள்”. ஓசைகள் நின்று போய் படுத்திருந்தார். ஆத்மா சாந்தியடைந்தது. இன்றும் அவர்களது சேவைகள் மற்றும் தொண்டுள்ளம் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

கிடைத்த விருதுகள் :
•  1962 – பத்ம ஸ்ரீ விருது
•  1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
•  1971 – குட் சமரிட்டன் விருது
•  1971 – கென்னடி விருது
•  1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
•  1973 – டெம் பிள்டன் விருது
•  1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1979 – அமைதிக்கான நோபல் பரிசு
•  1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை

வடக்கு கல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸா என்ற பெண்மணி நீண்ட நாட்கள் தீரா வயிற்று வலியால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நாள் ‘வீட்டில் யாரும் இல்லாத நேரம் வயிற்று வலி வந்து விட்டது. சுடு மணலில் விழுந்த மீன் போலத் துடித்தார்’. படுக்கைக்கு அருகே அன்னை தெரசாவின் படம் இருந்தது. ‘அன்னையே என் வீட்டில் யாரும் இல்லை. உங்களுடைய பாதுகாப்பில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னுடைய தீரா வயிற்று வலியைய் குணமாக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு அங்கு இருந்த அன்னை தெரசாவின் உருவப் படத்தை வயிற்றின் மீது வைத்ததாகவும் அதன் பிறகு பெர்ஸாவுக்கு ‘வயிற்று வலி’ வரவே இல்லை எனவும் கூறப்படுகிறது.

கிருஸ்துவ மரபின்படி ஒருவர் இறந்த பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் ஏதாவது ஒரு அதிசயம் அவரது பெயரில் நிகழ்ந்தால் “ஆசிர்வதிக்கப்பட்டவர்” என்ற பட்டம் வழங்கப்படும். இங்கு பெர்ஸா வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் பெற காரணமாக இருந்தது.

அக்டோபர் 19, 2003-ல் வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் 3 இலட்சம் பேர் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேர விழா நடைபெற்றது. இரண்டாம் ஜான் பால் விழாவிற்கு வருகை தந்திருந்தார். அவரது முன்னிலையில் தெரசாவுக்கு ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

புனிதர் பட்டம் : அவரது பெயரால் இரண்டாவது அதிசயம் ஒன்று நிகழ வேண்டும். அது நிகழ்ந்து விட்டால் புனிதர் பட்டம் உறுதி செய்யப்படும். அதற்காக காத்திருப்போம்.

அன்னை தெரசா” நிச்சயம் புனிதராவார்.  அவர் புனிதராகும் இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெரும்பேறு அல்லவா?




"ஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது"


"தனிமையும் தன்னிரக்கமுமே மிகப் பயங்கரமான வறுமைநிலையாகும்."

"நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள்."