Tuesday, 30 October 2012

கணவன் – மனைவி இடையே காதல் மலர வேண்டுமா?




கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை
  • கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
  • குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
  • குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
  • வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2.
ஒத்துழைப்பு
3.
மனித நேயம்
4.
பொழுதுபோக்கு
5.
ரசனை
6.
ஆரோக்கியம்
7.
மனப்பக்குவம்
8.
சேமிப்பு
9.
கூட்டு முயற்சி
10.
குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
  1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
    2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
    3. கோபப்படக்கூடாது.
    4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
    5. பலர் முன் திட்டக்கூடாது.
    6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
    7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
    8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
    9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
    10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
    11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
    12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
    13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
    14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
    15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
    16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
    17. ஒளிவு மறைவு கூடாது.
    18. மனைவியை நம்ப வேண்டும்.
    19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
    20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
    21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
    22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
    23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
    24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
    25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
    26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
    27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
    28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
    29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
    30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
    31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
    32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
    33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
    34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
    35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
    36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
    37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
    1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
    2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
    3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
    4. விரும்பியதைப் பெற இயலாமை.
    5. ஒருவரையொருவர் நம்பாமை.
    6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
    7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
    8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
    9. விருந்தினர் குறைவு.
    10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
    11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
    12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
    13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
    14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
  1. அன்பாகப் பேசுவது
    2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
    3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
    4. குறை கூறாமல் இருப்பது.
    5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
    6. இன்முகத்துடன் இருப்பது.
    7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
    8. பிறரை நம்புவது.
    9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
    10. பணிவு
    11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
    12. பிறர் வேலைகளில் உதவுவது.
    13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
    14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
    15. சுறுசுறுப்பு
    16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
    17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
    18. நகைச்சுவையாகப் பேசுவது.
    19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
    20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
    21. நேரம் தவறாமை.
    22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
    23. தெளிவாகப் பேசுவது.
    24. நேர்மையாய் இருப்பது.
    25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு??
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

Wednesday, 10 October 2012

ஜொஹானேஸ் குட்டன்பெர்க் (அச்சியந்திரம் உருவான கதை)


புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தொடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார். 

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சியந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg). 

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Menu scripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.   

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார். 


குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார். 

தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
   

1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.   

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.  

சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .


குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.

Friday, 5 October 2012

தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird



உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird. 


1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ட்சிகளை செய்து பார்த்தார்

இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார்

அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறதுஉடல் நலமின்மையும் வறுமையும்கூட ஜான் லோகி பேர்டின் கனவையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குலைத்து விடவில்லை. இதேபோல் நாமும் நமது வாழ்வில் கனவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு முன்னேறினால் இவற்றுக்கு முன் எந்தத் தடையும் உடையும். எந்த வானமும் வசப்படும்

மார்க்கோனி (வானொலியின் தந்தை)



வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர்வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.  
வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.

மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.

1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.

தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.


வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.

Monday, 1 October 2012

சிக்மண்ட் ஃப்ராய்ட் (உளவியலின் தந்தை)


ரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை உறவினர்களாக கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும், ஏன் சாத்தானின் படைப்புகளாககூட பார்த்தனர், நடத்தினர். ஆனால் மனநோயும் உடல்நோயைப் போன்றதுதான் அது சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றுதான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருவர் துணிந்து கூறினார். மேலும் நாம் காணும் கனவுகளின் பொருள் பற்றியும் பல ஆய்வுகளை செய்து அதுவரை கூறப்படாதவற்றை தைரியமாக கூறி உலகின் புருவங்களை உயர்த்தினார். அவர்தான் 'psycho analysis' என்ற உளபகுப்பாய்வு முறையை உருவாக்கித் தந்த உலகம் போற்றும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

1856-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் ஆஸ்திரியாவின் Pribor நகரில் பிறந்தார் ஃப்ராய்ட். அவரது தந்தை ஜேக்கப் ஃப்ராய்ட் கம்பளி வியாபாரம் செய்து வந்தார். அவருடைய இரண்டாம் மனைவி Amalie-வின் முதல் குழந்தையாக பிறந்தவர்தான் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Schlomo Freud). ஆரம்பம் முதலே ஃப்ராய்ட் அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்ததால் பெற்றோர் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கினர். அவர் அமைதியாக படிக்க அவருக்கென்று தனி அறையை ஒதுக்கி கொடுத்தனர். ஃப்ராய்ட் கேட்டதெல்லாம் அவருக்கு கிடைத்தது. தொழிற்புரட்சி காரணமாக தந்தையின் சிறு துணி ஆலையால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. எனவே ஃப்ராய்ட் நான்கு வயதாக இருந்தபோது வியன்னாவுக்கு (Vienna) பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். அங்கும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார் தந்தை. அவர்கள் யூதர்களாக இருந்ததாலும், யூதர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செய்ததாலும் மற்ற ஆஸ்திரியர்களின் வெளிப்படையான வெறுப்புக்கு ஆளாகினர். அதனாலேயே தான் ஒரு மிகச்சிறந்த அறிஞனாக வரவேண்டும் என்ற வைராக்கியம் ஃப்ராய்டின் மனத்தில் வேர் விடத் தொடங்கியது.

ஃப்ராய்ட் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பல துறைகளை அலசி விட்டு இறுதியில் மருத்துவத்தை தேர்ந்தெடுத்து 1881-ஆம் ஆண்டு அதில் பட்டம் பெற்றார். அவர் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தது நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, இயற்கையின் சில புரியாத புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகதான். நரம்பியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் சொந்தமாக மருந்தகத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்திலிருந்தே அவருடைய சிகிச்சை முறைக்கும், கருத்துகளுக்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஃப்ராய்ட் வகுத்துக்கூறிய புதிய எண்ணங்களை எள்ளி நகையாடியது வியன்னா மருத்துவ கழகம். ஃப்ராய்ட் பயன்படுத்திய மனோ வசிய சிகிச்சை முறையை கடுமையாக எதிர்த்த அவருடைய முன்னால் பேராசிரியர் ஃப்ராய்டை தன் 'Cerebral Anatomy Institute' என்ற மூளைக்கூறு கழகத்திலிருந்து தடை செய்தார் அதனால் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஃப்ராய்டுக்கு. ஆனால் மனம் தளராமல் தன் சொந்த மருத்துவத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.  

நரம்பியல் சம்பந்தபட்ட நோய்களுக்கும், மன நோய்க்கும் வித்தியாசமான அனுகுமுறையைப் பயன்படுத்தி சிகிச்சைகளைத் தொடர்ந்தார். மனநோய் என்பது மூளையை பாதிக்கக்கூடிய நோய் எனவே நோயாளியின் மனோபாவங்களையும் வரலாற்றையும் கேட்டறிந்து அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ள குறைகளை அறிந்து களைய வேண்டும். அவ்வாறு செய்யாதவரையில் எந்த மருந்தாலும் மனநோயை குணப்படுத்த முடியாது என்று முதன் முதலில் கண்டு சொன்னவர் ஃப்ராய்ட்தான். அவ்வாறு அவர் வகுத்துத் தந்த சிகிச்சை முறைதான் 'psycho analysis' என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் அவரது சிகிச்சை முறைகளை ஒதுக்கினாலும் நோயாளிகளுடையே அவர் பிரபலம் அடையத் தொடங்கினார். வெகு விரைவில் பல மனநோயாளிகள் அவரிடம் கொண்டு வரப்பட்டனர். அந்த நோயாளிகளுக்கு அதுவரை வழங்கப்படாத சிகிச்சை முறைகளை அவர் கையாண்ட போது ஏற்பட்ட அனுபவங்களும், அவர் செய்த பரிசோதனைகளும்தான் புகழ்பெற்ற கோட்பாடுகளை வகுக்க அவருக்குத் துணை புரிந்தன

பத்து வருட பரிசோதனைகளுக்குப் பிறகு ஹிஸ்டீரியா (Hysteria) எனப்படும் இசிவு நோய் பற்றிய தனது முதலாவது நூலை வெளியிட்டார். மருத்துவ உளவியலில் அது ஒரு மைல்கல்லாக அமைந்தது. தனது ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர் மனித மனத்தின் தன்மை பற்றி நிறைய சிந்தித்தார் அப்போதுதான் கனவுகளின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது கனவுகளுக்கும், ஆழ்மனத்திற்கும், நரம்பியல் நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பிய ஃப்ராய்ட் தான் தினசரி கண்ட கனவுகளை எழுதி வைத்து அவற்றை ஆராயத் தொடங்கினார். 1900-ஆம் ஆண்டில்  'The Interpretation of Dreams' என்ற கனவுகளின் விளக்கம் பற்றிய நூலை வெளியிட்டார். அந்த நூலில் அவர் ஆழ்மன செயற்பாடுகள் எப்படி கனவுகளின் உள்ளடக்கத்தைப் பாதிக்கின்றன என்று விளக்கியிருந்தார். அதோடு வாய் தவறி வார்த்தைகளைச் சொல்வது, பெயர்களை மறந்துபோவது, தானே விபத்துக்குள்ளாவது போன்றவற்றுக்கும் ஆழ்மனத்திற்கும் தொடர்பு உண்டு என்று அவர் விளக்கினார். அவரது கருத்துகளும், நூலும் அவருக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன

மனநோய் அல்லது நரம்பு கோளாறுகளை உருவாக்குவதில் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலுணர்ச்சி பெரும்பங்காற்றுகிறது எனும் கொள்கையை வலியுறுத்தினார் ஃப்ராய்ட். பாலுணர்ச்சியும், சிற்றின்ப வேட்கையும் பதின்ம பருவத்தில் அல்ல குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே தோன்றி விடுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் இன்னும் விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவருக்கு உளவியல் உலகில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மேலும் Super ego, Ego, Id ஆகிய மூன்று ஆதிக்கங்கள் மனத்தை இயக்குகின்றன என்றும், அவற்றை மூளையின் மூன்று பிரிவுகளாக கொள்ளலாம் என்றும் ஃப்ராய்ட் கூறினார். வாழ்க்கையில் நடக்கும் கொடூரமான நிகழ்ச்சிகள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவை Id-இல் பதிவாகின்றன.  Super ego, Ego ஆகியவற்றின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் சராசரியாக வாழ்கிறான். Id-இன் ஆதிக்கம் மேலோங்கும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தன்னையறியாமல் தாக்கத் தொடங்கி விடுகிறான். அதனால் நோயாளியின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு Id-இல் பதிந்த கொடூர நிகழ்ச்சிகளை தத்துவ முறையில் அழித்து விட்டால் மனநோயை குணப்படுத்தி விடமுடியும் என்பதுதான் ஃப்ராய்டின் தத்துவம்.
  

பின்னாளில் ஃப்ராய்டுக்கு தாடை எலும்பில் புற்றுநோய் ஏற்பட்டு முப்பது அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த நோய் தந்த வேதனைகளுக்கிடையிலும் அவர் கடுமையாக உழைத்தார். அந்தக்கால கட்டத்தில் ஹிட்லரின் நாசிப் படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தன. அப்போது 82 வயதை எட்டியிருந்த நிலையிலும் ஃப்ராய்ட் ஒரு யூதராக இருந்ததால் நாட்டை விட்டு வெளியேறிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து தன் மனைவி, மகளுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 15 மாதங்களுக்கு பிறகு 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் தமது 83-ஆவது அகவையில் அவர் காலமானார்

னம் என்பது புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில் அந்த புரியாத மனக் கதவினை திறந்ததால்தான் 'உளவியலின் தந்தை' என்று போற்றப்படுகிறார் ஃப்ராய்ட். வரலாற்றில் பல முன்னோடிகளைப் போலவே அவரையும், அவரது கண்டுபிடிப்புகளையும் உலகம் உதாசீணப்படுத்ததான் செய்தது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் 'உளவியல்' என்ற வானத்தை வசப்படுத்த ஃப்ராய்டுக்கு உதவியிருக்கின்றன. அதே தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த நமக்கும் துணை புரியும்.