Wednesday, 26 September 2012

வில்லியம் ஷேக்ஸ்பியர்

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு '' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23.

1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (Stratford-upon-Avon) என்ற சிற்றூரில் பிறந்தார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் பிறந்தது ஏழ்மையில்தான். எட்டுப் பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் சேக்ஸ்பியர் கையுறை தைத்து விற்கும் வியாபாரி. தொழில் அவ்வுளவு இலாபகரமாக இல்லை என்பதால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அதன் பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதினெட்டு வயதான போது தன்னை விட எட்டு வயது மூத்தவரான ஆன் ஹதாவேயை (Anne Hathaway) என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

23 வயதான போது அவர் பிழைப்புத் தேடி லண்டன் வந்து சேர்ந்தார் அந்த ஆண்டு 1587. அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்றை பார்ப்போம்...அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது லண்டன். சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்து சீமான்களும், செல்வந்தர்களும் குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடக கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல் காக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைகளை காவல் காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது அந்த நாடக கொட்டகையின் உரிமையாளருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.  

ஷேக்ஸ்பியருக்கு ஞாபகத்திறன் அதிகம். குதிரைகளை காவல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்று தனக்குள் நினைத்துக்கொள்வார். இது சினிமாக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வரவில்லை என்பது தெரிந்து பதறிப் போனார் நிர்வாகி.நிலமையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் தாம் நடிப்பதாகக் கூறினார். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். அப்போது வேறு வழி தெரியாததால் நிர்வாகியும் சம்மதிக்க ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகமும் தொடங்கியது

தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார் சேக்ஸ்பியர். சில முக்கிய காட்சிகளில் அவர் சொந்தமாகவும் வசனம் பேசினார். அந்த வரவேற்பைப் பார்த்து மகிழ்ந்துபோன நிர்வாகி தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது. அண்மையில் ஏற்பட்ட சார்ஸ் நோய் எப்படி சில நகரங்களை முடக்கியதோ அதேபோல் பிளேக் நோயால் முடங்கிப் போனது லண்டன் மாநகரம். அதனால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடக கொட்டகைகளும் மூடிக்கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது

லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புதுவகை கவிதைகளையும் அவர் புனைந்தார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் என்று சொல்வதை விட இயற்றினார் என்று சொல்ல வேண்டும். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம்

A Midsummer Night's Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கியம் 'Romeo and Juliet' என்பதை எந்த மொழி அறிஞராலும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும்போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் மறக்க முடியாது.

இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமரகவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலக பல்கலைக்கழகங்கள் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன.  

ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாக முடிக்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக்கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும் காரணம் அல்ல தன்னம்பிக்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை முதலீடு செய்வோம். திறமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம். நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்

Tuesday, 25 September 2012

மனிதனின் வாழ்க்கை


பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். இதனிடையே எத்தனையோ மாற்றங்கள் தோன்றுகின்றன. பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இந்த மனித வாழ்க்கை ஒரு சக்கரம் போல சுழலுகிறது. ஒரே பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம் திடீரென்று மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் போது தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தை நீக்கி மனப் பக்குவத்தோடு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திறமையாக வாழ்க்கைச் சக்கரத்தை தடம் புரளாமல் ஓட்டும் மனிதன், வாழ்க்கையைச் செம்மையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறான் என்று சொல்லலாம்.
வாழ்க்கையைக் காலத்தோடு ஒப்பிடும் போது வாழ்க்கை அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. எத்தனையோ காலங்கள் ஓடி விட்டன. இன்னும் எத்தனையோ காலங்கள் ஓட வேண்டும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயுள்ள காலத்தில் இந்த மனிதனின் வாழ்க்கை எத்தனை வகையில் மாறுபடுகின்றன. மனிதன் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறான். இந்த அனுபவம் அவனுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாடமாக அமைந்து விடுகிறது.
இந்த இரண்டு காலச் சக்கரங்களுக்கிடையே மனிதன் அகம்பாவம், கோபம், கெட்ட அதிர்வலைகள் போன்ற குணங்களுக்கு அடிமையாகிறான். அகம்பாவம் மனிதனின் சுயரூபத்தை அழித்து அவனை தனிமையாக்குகிறது. “தான்” என்ற எண்ணம் கொண்ட மனிதன் என்றும் வாழ்ந்ததில்லை என்ற பாடலின் வரிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அகம்பாவத்தால் மனிதன் மகிழ்ச்சியைத் தொலைக்கிறான். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் இனியதாகவும் இருக்கிறது. கெட்டதாகவும் நடக்கிறது. இரண்டையும் மனிதன் ஒன்றாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருந்தால் வாழ்க்கை அவ்வளவு சுவையாகத் தோன்றாது.  அவ்வப்போது பிரச்சனைகளும்  தோன்றினால்தான் வாழ்க்கையில் அதனை சமாளிக்கும் தன்மையும் மனிதனுக்குள்ளே பிறக்கும்.
நேற்று என்ன நடந்தது? என்கிற கடந்த கால நினைவுகளிலும், நாளை என்ன நடக்கும்? என்கிற எதிர்ப்பார்ப்புகளிலும் மனிதன் பெரும்பான்மையான நேரங்களை வீணாகக் கற்பனையிலேயே  செலவிட்டு நிகழ்கால வாழ்க்கையை மறந்து விடுகிறான். கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை நம்மைச் செயல்பட விடாமல் முடக்கிப் போட்டு விடுகிறது. வருங்கால வாழ்க்கையை பற்றிய அதிகமான சிந்தனை  மனிதனின் வாழ்க்கையை ஒரு போராட்டமாக்கி விடுகிறது. நிகழ்கால வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்து, இந்த வாழ்க்கையை ஒரு சுமையாகவே சுமக்கத் துவங்கி விடுகிறான்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை சொல்லிக் கேட்டிருப்போம். மனிதனின் மனம் தெளிவாகயிருந்தால், அதனுடைய மகிழ்வுகள் முகத்தில் தோன்றும். மனம் நொந்து போயிருந்தால், முகம் வாடி வதங்கித் தோன்றும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி அவனைச் சார்ந்திருப்பவர்களையும் மகிழ்ச்சி அளிப்பதுடன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தெம்பையும் கொடுக்கிறது. இது தெரியாமல் மனிதன் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் கொண்டு முகத்தைச் சுருக்கி மனதை கனமாக்கி தனிமையைத் தேடுகிறான். உடனிருப்பவர்களையும் கவலைக் கடலில் ஆழ்த்தி விடுகிறான். மனிதனின் மனம் வாழ்க்கைப் போராட்டத்தால் உளைச்சல் அடைந்தால் அமைதியைத் தேடி அலைகிறது. இந்த அமதியைத் தியானம் தருகிறது. இது உடல் நலம், அமைதி, அச்சமின்மை, போன்றவற்றை அளிக்கிறது.

ஊக்கமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் மீது மனிதன் நாட்டம் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியாகக் கழிப்பவன் தன்னுடன் சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறான். மற்றவரின் செயலை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தச் சின்ன மாற்றம் மற்றவர்களின் அன்பையும், பாசத்தையும் அவனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
மனிதன் முதலில் தேவையற்ற நிகழ்வுகள் வீண் வம்பை வளர்க்கும் நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்க்கப் பழக வேண்டும்.  நம்மை விட அதிகமான கருத்துகள் தெரிந்தவராயிருந்தால், அவர் தம்மை விட எளிமையானவராகவோ அல்லது வயது குறைவானவராகவோ இருந்தாலும் கூட அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். இது போல் நமக்குத் தெரிந்த கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.
காலத்தோடு தோன்றும் மாற்றங்களை மனிதன் மனப்பக்குவத்தோடு, மனம் திறந்து ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். ஒரே மாதிரியான வாழ்க்கையினால் மனிதன் அவ்வப்போது சலிப்படைகிறான். இதனால் அவ்வப்போது மனிதன் அதற்கேற்ற மாற்றங்களை உருவாக்கிக் கொள்வதுடன் வாழ்க்கையில் வரும் எந்த மாற்றங்களையும் வரவேற்கப் பழகிக் கொள்ள வேண்டும். மாற்றம்தான் ஏமாற்றத்தைத் தவிர்க்கும்.  இந்த மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்றும்.

Monday, 24 September 2012

மனிதன்..........

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி மாலை மாலையாய் கண்ணீர் விட்டார்கள். ஆளாளுக்கு லட்சக் கணக்கில் நிதி உதவி அளிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் எல்லாமே வெறும் வேஷமாகிப்போனது
ஒரு சில நடிகர்கள் தவிர மற்ற யாருமே பணம் அனுப்பவில்லை. சிலர் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்தது. திரைக்கு வெளியேயும் தங்களை சிறந்த நடிகர்களாக நிரூபித்தார்கள் ஹீரோக்கள்.

இப்போது சிவாகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை. "என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று புலம்பிய சூப்பர் ஸ்டார்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டுகொள்ள வில்லை. சிவகாசி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு, காஜல் அகர்வாலோடு டூயட் பாடுவதற்குதான் நேரம் இருக்கிறது. அவரது கவலை இப்போது அவரது துப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றித்தானே தவிர சிவாகாசி பட்டாசை பற்றியும், அங்கே வெடித்து சிதறிய அப்பாவி தொழிலாளர்களையும் பற்றி அல்ல.

ஆனால் இந்த ஹீரோக்களின் முகத்தில் அடித்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. யாரும் கேட்காமல், யாரும் கோரிக்கை வைக்காமல் தனது மருந்து கம்பெனியில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தீக்காய மருந்துகளை சிவகாசிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்முட்டி

38 பேரை பலிகொண்ட சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தினால் பலபேர் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, ’அக்னிஜித்’ மருந்து வேண்டும் என பதஞ்சலி என்ற நிறுவனத்தை சிவகாசி அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்..... இந்த மருந்தை தயாரிக்கும் 'பதஞ்சலி ஆயுர்வேத' நிறுவனம் நடிகர் மம்முட்டிக்கு சொந்தமானதாம்.

இந்த விஷயம் நடிகர் மம்முட்டிக்கு தெரிய வந்ததும் , உடனே மொத்த மருந்துகளையும் இலவசமாகவே அனுப்பி வைக்கும்படி அவர் கூறியிருக்கிறார். இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் ... மேலும் இனி எவ்வளவு மருந்துகள் தேவைப்பட்டாலும் அனைத்தையும் இலவசமாகவே வாங்கிகொள்ளுங்கள் என்றும் மம்முட்டி கூறியிருக்கிறாராம்.

இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு செப்டம்பர் 7பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்,'' என்றார்.

பசி.........................


பசி ... ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ப்படும் சக்திக்கான தேடல் / உணர்வு . அந்த உணர்வு உடலுக்கு தேவையான சக்தியை பெறுவதற்காகவும் உடலுடன் உயிர் ஒட்டியிருக்க தேவையான உடல் இயக்க தொழிற்பாட்டின் உந்துதலை தூண்டுவிக்கவும் உடலால் உணர்விக்கப்படும் ஒரு அறிவிப்பு ..

இவ்வாறான உணவு தேடலை உடல் ஆரம்பிக்கும் போது ஒரு மனிதனின் செயல்ப்பாட்டில் பல மாற்றங்கள் .. பிடித்த உணவு , சத்தான உணவு ,ஆடம்பர உணவு வகை , என பல வகைப்படுத்தப்பட்டுள்ள உணவுகளில் ஒரு உணவுக்கான தேர்வு நடக்கிறது . தெரிவு செய்த உணவையே உண்கிறோம் ..

இது பணமுள்ளவனிடம் மட்டும் சாத்தியமாகும் ..

ஆனால் பணமில்லதவர்கள் வாழ்க்கை ??

1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ‘சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை’ ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர்.

இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே’ என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறாக பசி பட்டினியால் அவல சாவை தழுவிக்கொள்ளும் மக்கள் உலகின் ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ..

இவர்களுக்காக உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்பட தேவையான அளவு உணவு கையிருப்பு இல்லை என அந்த அந்த நாட்டு அரசாங்கத்தால் கை விரிக்கப்பட்டது ..

பல நாடுகளின் தீவிர முயற்ச்சியால் உலகிற்கான உணவு வழங்கலும் தேவையும் ஓரளவு மட்டும் பூர்த்தி செய்யப்பட்டது ...

இவ்வாறான உணவுக்கான தேடலில் இறந்து போனவர்கள் பல லட்சம் பேர் :'(

அமரிக்காவில் ஒரு பல்கழைக்கழகம் செய்த ஆராட்ச்சியில் முடிவாக உணவுக்கான வழங்கல் போதிய அளவு இருந்தும் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவுகள் விரயமாக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர் ..

ஆம் .... அது முற்றிலும் உண்மை ...

இன்றும் நம்மில் பலருக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் தெரிந்திருக்கும் . குறிப்பிட்ட உதாரணமாக திருமண வைபவத்தை எடுத்துக்கொள்வோமேயானால் ஒரு திருமண வைபோகத்தில் குறிப்பிட்ட தொகை மக்களுக்கு உணவு தயாரிப்பார்கள் , அப்படி தயாரிக்கப்பட்ட உணவு மக்கள் வருகை குறைவால் அல்லது மித மிஞ்சிய உணவு சமைக்கப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் , இறுதியில் வைபோகம் முடியும் தருவாயில் அந்த உணவுகள் குப்பைக்குள் கொட்டப்பட்டுவிடுகிறது ;'(

இதே போல் பல விழாக்கள் , நிகழ்வுகள் , கேளிக்கை களியாட்டங்களில் வீசப்படும் உணவுகளை உலகம் முழுவதும் ஒரு மாதம் கட்டுப்படுத்தினால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இருபது லட்சம் உயிர்களுக்கு ஒரு வாரகாலம் உணவு வழங்கலாம் என விபரங்கள் வெளியிட்டுள்ளது அமரிக்கவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் .

நண்பர்களே ... !!!!!

சிந்தியுங்கள் ... உங்களின் வீட்டுக்கு அருகில்அல்லது உங்களின் உறவினர்களின் , நண்பர்களின் விழாக்கள் , நிகழ்வுகள் , கேளிக்கை களியாட்டங்களில் வீனாக்கப்படும் உணவுகளை பயனுள்ளவாறு பயன்படுத்தலாமே ????

அதாவது ,

உங்களின் வீட்டுக்கு அருகில்அல்லது உங்களின் உறவினர்களின் , நண்பர்களின் விழாக்கள் , நிகழ்வுகள் , கேளிக்கை களியாட்டங்களில் வீணாக்கப்படும் உணவுகளை அருகில் உள்ள அநாதை ஆச்சிரமங்கள் , முதியோர் இல்லங்கள் , அல்லது ஏழை மக்களுக்கு சென்றடைய கூடியதாக நீங்கள் ஒரு ஏற்பாடு செய்யலாமே ???

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது :-

(1) ஒரு விழா தொடங்கமுதல் அந்த விழா ஏற்பாட்டாளரை தொடர்பு கொண்டு எஞ்சும் உணவுகளை உணவுகளை அருகில் உள்ள அநாதை ஆச்சிரமங்கள் , முதியோர் இல்லங்கள் , அல்லது ஏழை மக்களுக்கு சென்றடைய கூடியதாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

(2 ) முதலில் விழா ஏற்ப்பாட்டளரை தொடர்பு கொண்டு உங்களின் திட்டம் பற்றிய பூரண விளக்கத்தை கொடுங்கள்

(3) அவரின் ஒப்புதல் பெற்றதின் பின்னர் ஆதரவற்றோர் நிலையங்கள் அல்லது ஏழை மக்களின் புனர்வாழ்வு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்

(4 ) நீங்கள் தொடர்பு கொண்ட நிலைய அதிகாரிகளுக்கு விழா நடைபெறும் இடம் , திகதி , நேரம் போன்றவற்றை தெரியப்படுத்துங்கள்

(5) எந்த கல்யாண வீட்டிலும் , வைபோகத்திலும் மக்களின் எண்ணிக்கைக்கு அளவாக மட்டும் உணவுகள் ஆக்கப்படுவதில்லை. எனவே எஞ்சும் என எதிர்பார்க்கப்படும் சாப்பாட்டின் அளவு , பற்றிய எதிர்பார்ப்புகளை நிலைய அதிகாரியிடம் தெரிவியுங்கள்

(6) அவர்களின் உதவியுடன் எஞ்சிய உணவுகளை குப்பைக்கு செல்லவிடாமல் தடுத்து உயிர் வாழ போராடும் மக்களுக்கு உயிர்த்துளியாக உணவுகளை சென்றடைய வழி செய்யுங்கள் :)

# கடவுளும் கல்லானான் நாகரிக உலகில் :(
இன்றைய சூழ்நிலையில் மனிதர்களே மனித இனத்தை காக்கவேண்டும் ...
எங்கள் மனித இனத்துக்கு உயிர்த்துளி வழங்குவோம் :)
முயன்றால் மாற்றலாம் உலகத்தை :)

மாற்றம் ஒன்றே மாற்றம் தரும் :)

என் அன்பான நண்பர்களே ..!!!

உங்களுக்கும் என் கருத்து பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

உயிர் உடைத்த புகைப்படம்...

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?


கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (Super Man)



உலகிலேயே மிகுந்த பலசாலி யாரென்று கேட்டால் நீங்கள் யாரைக்குறிப்பிடுவீர்கள்? சிறுவர்களையும், இளையர்களையும் கேட்டால் ஒரு பெயர் அடிக்கடி ஒலிக்கும் அதுதான் 'சூப்பர்மேன்'. சராசரி மனிதனால் செய்ய முடியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பல சாகசங்களை திரையில் புரிந்து பார்ப்பவர்களை கனவுலகில் சஞ்சரிக்கவிட்ட ஓர் அற்புத கதாபாத்திரம்தான் 'சூப்பர்மேன்'. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். என்பதுகளிலும், தொன்னூறுகளிலும் உலகின் ஆக பலசாலியாக திரையில் வலம் வந்த அவர் ஓர் விபத்தின் காரணமாக தன் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், பலத்தையும் இழப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
திரையில் அட்டகாசமாக விண்ணில் பறந்த அவர் தன் விரல்களைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். அந்த அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போய் பின்னர் வாழ்க்கையில் போராட முடிவெடுத்து அதன் மூலம் தனது உண்மையான பலத்தையும், உள்ளத்திடத்தையும் உலகுக்குக் காட்டிய அந்த அதிசய மனிதனின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்போம்.

1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். தன் சகோதரர் பெஞ்சமினுடனும், தாயாருடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் கிரிஸ்டோபர். சிறுவயதிலிருந்தே இரு சகோதரர்களுக்கும், நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அட்டைப்பெட்டிகளை கப்பல்கள் போல் பாவித்து அவர்கள் கடற்கொள்ளையர்களாக நடித்து மகிழ்வர். எட்டு வயதானபோதே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இசைமீது ஆர்வம் ஏற்பட்டதால் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பள்ளிப்பாடகர் குழுவிலும், ஐசாக்கி குழுவிலும் சேர்ந்து பள்ளியில் மிக துடிப்பான மாணவராக விளங்கினார்.

உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பிறகு அவர் கார்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக இறுதியாண்டில் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது. நியூயார்க்கின் உலகபுகழ் பெற்ற ஜூலியட் மேடை கலைப் பள்ளியில் நடிப்புப் பயிற்சிபெற அவரும், இன்னொரு கார்னெல் பல்கலைக்கழக மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இன்னொரு மாணவரின் பெயர் ராபின் வில்லியம்ஸ். இருவருமே பின்னாளில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களானது அனைவரும் அறிந்ததே. ஜூலியட் மேடைக் கலைப்பள்ளியில் பயின்றபோதே கிரிஸ்டோபருக்கு பல்வேறு நடிப்பு வாய்ப்புகள் வந்தன. 1976-ல் புகழ்பெற்ற நடிகை கேத்ரின் ஹெப்பர்னுடன் முதன் முதலாக A Matter of Gravity என்ற Broadway என்ற இசை நாடகத்தில் நடித்தார். அதனால் அவரால் நடிப்புப் பள்ளியில் தொடர முடியவில்லை.

1978 ஆம் ஆண்டில்தான் உலகம் அவரை உற்றுப் பார்த்து அதிசயிக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது. 'சூப்பர்மேன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க உகந்தவரை தேடியது ஹாலிவுட். அதற்காக விண்ணப்பித்த சுமார் 200 பேர் பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மாத படப்பிடிப்புக்குப் பிறகு உலகத் திரைகளில் 'சூப்பர்மேனாக' அவதரித்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ்.

அவருடைய கட்டான தோற்றமும், வசீகரமான முகமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. முதல் படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் மேலும் பதினாறு திரைப்படங்களிலும், பணிரெண்டு தொலைக்காட்சிப் படங்களிலும் சுமார் 150 மேடை நாடகங்களிலும் நடித்தார். மற்ற பெரிய நடிகர்களைப்போல் கதாநாயகன் பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் எந்தப் பாத்திரத்திலும் நடித்தார் ரீவ்ஸ். மிகச் சிரமமான சாகசக் காட்சிகளில்கூட துணை நடிகர்களைப் பயன்படுத்தாமல் சொந்தமாகவே நடித்தார். தான் ஈடுபட்ட எந்தக் காரியத்திலும் அவ்வுளவு ஈடுபாடு இருந்தது அவருக்கு. நடிப்புதான் அவருக்கு உயிர் என்றாலும் வெளிப்புற நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார் ரீவ்ஸ்.

அவர் என்னென்ன கற்றிருந்தார் என்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், விமானி லைசென்ஸ் பெற்று இரண்டு முறை சிறிய விமானத்தில் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்திருக்கிறார்,படகோட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார், முக்குளிக்கத் தெரியும், பனிச்சறுக்கு தெரியும், குதிரையேற்றம் தெரியும். 1990 களில் அவருக்கு குதிரையேற்றம் மிகப்பிடித்த விளையாட்டாக இருந்தது. இப்படி மிகத் துடிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ரீவ்ஸின் வாழ்க்கை தலை கீழாக மாறியது 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி. தன் குதிரை மீது அமர்ந்து அவர் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தபோது சற்று மிரண்டுபோன குதிரை எதிர்பாராத விதமாக முன்பக்கமாக அவரை தூக்கி அடித்தது. குதிரையின் கடிவாளத்தில் ரீவ்ஸின் கைகள் மாட்டிக்கொள்ள அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். முதுகெலும்பின் முதல் இரண்டு எலும்புகள் நொறுங்கின. அந்தக்கணமே கழுத்துக்கு கீழ் அவரது உடல் செயலிழந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் தவித்த அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படாதிருந்தால் அந்தக்கணமே அவர் உயிர் பிரிந்திருக்கும்.

மிக நுண்ணிய அறுவை சிகிச்சை செய்து அவரது தலையை முதுகெலும்போடு இணைத்தனர் மருத்துவர்கள். ஆறு மாதங்கள் நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இருந்தார் ரீவ்ஸ். தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் மிகத் துடிப்பாக செலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாத நிலையை அடையும்போது அது எவ்வுளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை அந்த நிலையில் இருந்தாலொழிய வார்த்தைகளால் வருணித்துவிட முடியாது. எனவேதான் தற்கொலையைப் பற்றியும் சிந்தித்தார் ரீவ். ஆனால் தன் மனைவி பிள்ளைகளுக்காககவும், இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும், உயிருள்ளவரை போராட தீர்மானித்தார். தான் புகழ்பெற்ற நடிகன் என்பதால் தன் மீது அனைத்துலக கவனம் பதிந்திருந்ததை நன்கு அறிந்த ரீவ்ஸ் முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சியில் அதிகம் செலவிடுமாறு அமெரிக்க அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.

உடற்குறையோருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதோடு நின்று விடாமல் 1996 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளையை நிறுவி உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளை தொடங்கி வைத்தார். stem cell research எனப்படும் மூல உயிரனு ஆய்வுக்காக குரல் கொடுத்தார். 1998-ல் Still Me என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம்பிடித்தது. 1996 ஆம் ஆண்டு அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அவர் அழைக்கப்பட்டார். அட்லாண்டாவில் நடைபெற்ற உடற்குறையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அறிவிப்பாளராக கலந்துகொண்டார்.தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் அவரை பேச அழைத்தன. உடல் மறுத்தபோதும், உள்ளம் ஒத்துழைத்தது. தாதியரின் துணையுடன் எல்லா அழைப்பையும் ஏற்றுக்கொண்டு உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார் ரீவ்ஸ்.

பல நிகழ்ச்சிகளில் உயிரை உருக்கும் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் உதிர்த்த புன்னகையை உலகம் கலங்கிய கண்களோடு பார்த்தது. கழுத்துக்கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் கிட்டதட்ட காய்கறிபோல் ஆகிவிட்டது அவரது உடல். ஆனால் உள்ளம் மட்டும் வலிமை குன்றாமல் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டென் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப்போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன் இதுபோன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ்க்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்பட்டிருந்தால் நாமெல்லாம் முடங்கிப் போயிருந்திருப்போம். ஆனால் ரீவ்ஸ் 1996 ஆம் ஆண்டில் 'A Step Toward Tomorrow' என்ற தொலைக்காட்சிப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதே ஆண்டு 'In the Gloaming' என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். அந்தப்படம் ஐந்து எமி(AMY) விருந்துகளுக்காக முன்மொழியப்பட்டது. Cable Ace விருது வழங்கும் விழாவில் அந்தப்படம் நான்கு விருதுகளை வென்றது. விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டி பல துவண்டுபோன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் தமது 52 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி காலமானார். அவரது உடல் நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி என்றும் மறையாதிருக்கும்.

ரீவ்ஸ்க்கு மரணத்துக்கு பிந்திய கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது நியூஜெர்ஸியின் ரஜ்ஜஸ் பல்கலைக்கழகம். டோனிப்ரூக் பல்கலைக்கழகமும் அவருக்கு கெளரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. கனவுகள் பற்றியும், தன்னம்பிக்கைபற்றியும் அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.....

"நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் நினைக்கத் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்". ஆம் உண்மைதானே! கிரிஸ்டோபர் ரீவ்ஸ் வாழ்ந்து காட்டியதுபோல் கனவு காணுங்கள் அந்தக் கனவை நனவாக்க தன்னம்பிக்கையை முதலீடு செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படாமல் போகாது.

இரவீந்தரநாத் தாகூர்


உலகத்தரம் வாய்ந்த அமர இலக்கியங்களை ஒவ்வொரு மொழியும் பல்வேறு காலகட்டங்களில் தந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியங்களை உலகம் முழுவதும் படித்து ரசிக்க வேண்டுமென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவற்றை அந்தந்த மொழி பேசுபவர்களே ரசிக்க முடியும். தாய் மொழியில் எழுதப்படும் ஓர் இலக்கியம் ஆங்கிலத்திற்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழி பெயர்க்கப்படும்போது அதன் இயற்கை சுவையும், வீரியமும் குறைந்து விடும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். அப்படிப்பட்ட நிலையிலும் ஆங்கில உலகத்தை கவரும் ஓர் வேற்று மொழி படைப்புதான் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசுக்குத் தகுதி பெறுகிறது. இந்திய இலக்கியத்தை பொறுத்தமட்டில் இதுவரை ஒரே ஒரு இலக்கியத்திற்குதான் அந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. வங்காள மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்ட அந்த படைப்பு கீதாஞ்சலி. அதனைத் தந்து இந்திய இலக்கிய உலகிற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த உன்னத கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம்.

1861-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார் தாகூர். குடும்பத்தில் பதினான்காவது பிள்ளை அவர். பெற்றோர் வசதி மிக்கவர் என்பதால் அனைவரும் செல்வ செழிப்பில் வளர்ந்தனர். இளம் பருவத்திலிருந்தே இலக்கியம், இசை, சமயம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார் தாகூர். வேதங்களையும் உபநிடதங்களையும் ஆர்வத்துடன் கற்றார். மொழியாற்றல் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. எனவே பனிரெண்டாவது வயதிலேயே கவிதைகள் புனையத் தொடங்கினார். தாகூரின் குடும்பம் வெளியிட்டு வந்த பாரதி என்ற பத்திரிகையில் அவரது ஆரம்பகால படைப்புகள் இடம்பெற்றன. கவிதைகள் எழுதிய அதே நேரத்தில் வங்காள நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடு கலந்து இசைத்தொகுப்பாகவும் வெளியிட்டார். பிற்காலத்தில் அது 'இரவீந்தர சங்கீதம்' என்று அழைக்கப்பட்டது.


தாகூர் முறையாக பள்ளி செல்லவில்லை அதற்கு காரணம் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளிலும், சட்ட திட்டங்களிலும் அவருக்கு உடன்பாடு கிடையாது என்பதுதான். கல்வியாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, இசையாக இருந்தாலும் சரி எதிலுமே சுதந்திரத்தை விரும்பியவர் அவர். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகியவற்றில் வல்லவராக இருந்தார். தனிமையையும் கவிதையையும் விரும்பிப் போற்றிய தாகூர் தனது மிகச்சிறந்த படைப்புகளை தனிமையின் இனிமையில்தான் எழுதினார். அவரது இலக்கிய பணி சுமார் அறுபது ஆண்டுகள் நீடித்தது. அந்தக்கால கட்டத்தில் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருபத்தைந்து நாடகங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்தார்.

இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல் ஆகியவைப் பற்றி விழிப்புணர்வூட்டும் பல கட்டுரைகளையும் அவர் எழுதினார். இவையெல்லாம் தவிர்த்து அவருக்கு ஓவியம் வரையவும் நேரம் இருந்தது. சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூட பாடதிட்டங்களையும், ஆசிரியர் கற்பிக்கும் முறைகளையும் விரும்பாத தாகூர் அந்தக்கால குருகுல முறைப்படி ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி அதில் நன்முறையில் கல்வி கற்பிக்க விரும்பினார். அதன் பயனாக அவர் 1901-ஆம் ஆண்டு தோற்றுவித்த ஒரு கலைக்கழகந்தான் சாந்தி நிகேதன். தன் செல்வத்தையும், எழுத்து மூலம் தான் ஈட்டிய பொருளையும் அந்தக் கல்வி நிலையத்திற்காக செலவிட்டார். அந்த கல்விக்கழகத்தில் மொழிகளும், கலைகளும் இயற்கைச் சூழலில் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கேயே தங்கி கற்பித்தனர், கற்றனர். 

இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் சாந்தி நிகேதனில் கல்வி கற்றனர். அன்னல் காந்தியடிகள் அந்தக் கல்வி நிலையத்திற்கு வருகை புரிந்தார். ஜவஹர்லால் நேரு அந்தக் கல்வி நிலையத்தின் மீது அதிக அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அந்த நிலையத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடதக்கது. சாந்தி நிகேதன் கலைக்கழகம் சிறிது சிறிதாக வளர்ச்சிப் பெற்று பின்னர் 'விஷ்வ பாரதி' பல்கலைக்கழகம் என்றானது. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அந்த பல்கலைக்கழத்தில் கல்வி பயில வருகின்றனர். 

இரவீந்தரநாத் தாகூருக்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தது 103 கவிதைகளின் தொகுப்பாய் அவர் படைத்த அமர காவியமான கீதாஞ்சலிதான். அந்தக் கவிதைகள் உயரிய தத்துவங்களையும், ஆன்மீக சிந்தனைகளையும் அடிப்படையாக் கொண்டவை. முதலில் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதியதுடன் பின்னர் தாமே அவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் தாகூர். 1912-ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலியை உலகம் ஆங்கிலத்தில் படித்து வியந்தது. அதற்கு அடுத்த ஆண்டே 1913-ல் அந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசை வழங்கி மகிழ்ந்தது நோபல் குழு. நோபல் பரிசுத் தொகை தாகூருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனைக் கொண்டு சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தின் செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது மேல்நாட்டு உலகம் தன் படைப்பைப் பாராட்டிய பிறகுதான் சொந்த நாட்டு மக்களின் பாராட்டும், கவனமும் தன் நூலுக்கு கிடைத்தது என்பது குறித்து வருந்தினார். 

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் போட்டு வைத்தார். துரதிஷ்டவசமாக அந்த வங்கி நொடித்துப் போனது. தாகூரின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1915-ஆம் ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆனால் 1919-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த விருதை திருப்பி அனுப்பி விட்டார் தாகூர். உலகம் போற்றும் அன்னல் காந்தியடிகளை 'மகாத்மா' என்று முதலில் அழைத்துப் போற்றியவர் தாகூர்தான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. 


ஒருநாட்டின் மிக முக்கியமான பாடலான தேசிய கீதத்தை எழுதும் கெளரவம் மிகச்சிறந்த கவிஞர்களுக்குதான் வழங்கப்படும். அந்த கெளரவத்தைப் பெற்ற இரவீந்தரநாத் தாகூர் எழுதித் தந்த இந்திய தேசிய கீதம்தான் 'ஜன கண மணஇந்தியாவிற்கு மட்டுமல்ல வங்காள தேசத்திற்கும் அவர்தான் தேசிய கீதத்தை எழுதித் தந்தார். உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய தனிப் பெருமை இரவீந்தரநாத் தாகூருக்கு மட்டுமே உண்டு. இந்திய இலக்கிய உலகிற்கு அனைத்துலக பெருமையை பெற்றுத் தந்த இரவீந்தரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் தனது 80-ஆவது அகவையில் காலமானார்

தாகூர் நோபல் பரிசை பெற்று கிட்டதட்ட 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. வேறு ஒரு இந்திய இலக்கியத்தால் இன்னும் அந்த உச்சத்தை எட்ட முடியவில்லை. அதுவே இரவீந்தரநாத் தாகூரின் பெருமைக்கு அளவுகோல். முறையாக கல்வி பயிலாமலும்கூட தாகூரால் நோபல் பரிசை வெல்ல முடிந்ததென்றால் நம்மால் சாதிக்க முடியாதது எது? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஓர் இலக்கை வகுத்துக் கொண்டு தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் உரமாக விதைத்து தைரியமாக முன்னேறினால் தாகூருக்கு வசப்பட்டதுபோல் நிச்சயம் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!.

Thursday, 20 September 2012

கன்பூசியஸ் (தத்துவ மேதை)

தத்துவம் என்றாலே உலகின் நினைவுக்கு வருவது கிரேக்கமாகத்தான் இருக்கும். அந்த தேசம்தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்ற மும்மூர்த்திகளை உலகுக்குத் தந்தது. எண்ணிக்கையில் அதிகமான தத்துவஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும், மற்ற தேசங்களும் அந்த துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. வான்புகழ் வள்ளுவனைத் தந்தது தமிழ்நாடு. கன்பூசியஸ் என்ற அறிஞரைத் தந்தது சீனா. இவர்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் தத்துவம் என்பதே எள்ளி நகையாடப்பட்டது. தத்துவத்தைப் பேசியவர்களை இருட்டறையில் கருப்பு பூனையைத் தேடி அலையும் குருடர்கள் என்று சமுதாயம் முத்திரைக் குத்தியது. அந்த இழிவுகளையெல்லாம் தாண்டிதான் தங்கள் முத்திரைப் பதித்திருக்கின்றனர் உலகம் போற்றும் பல தத்துவ மேதைகள். அவர்களுள் கிட்டதட்ட கடவுள் அந்தஸ்துக்கு வணங்கப்பட்ட ஒருவரைப் பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் சீன தேசம் உலகுத்தத் தந்த பெருங்கொடை கன்பூசியஸ்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு 551-ஆம் ஆண்டில் சீனாவின் Shandong மாநிலத்தில் பிறந்தார் கன்பூசியஸ். அவரது தந்தை தமது 70-ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார் அந்த மனைவிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது அந்த பிஞ்சு வயதிலேயே அவருக்கு குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. பல வேலைகளை செய்து பொருள் ஈட்டினார். சிறு வயதிலேயே தாம் சிரமபட்டதாலோ என்னவோ மனிதனுக்கு துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்களின் அறியாமைக்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். பதினாறாவது வயதிலேயே அவர் சாக்ரடீஸைப் போலவே உண்மைகளைத் தேடி அலையத் தொடங்கினார்.

இளம் வயதில் அவர் வரலாற்றையும், கட்டடக்கலையையும் கற்றறிந்து மிகச்சிறந்த வரலாற்றாசிரியராக விளங்கினார். தமது 20-ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். சமுதாய நலன் பற்றியே அவரது எண்ணங்கள் இருந்ததால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வுளவாக நிறைவைத் தரவில்லை. இருப்பினும் தமது மூன்று பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்தார். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வருமானம் தேவை என்பதால் வேலை தேடி அலைந்தார். அவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த அரசாங்கம் உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக அவரை வேலையில் அமர்த்தியது. அதில் பல மாற்றங்களை அவர் அறிமுகபடுத்தியதைக் கண்டு மகிழ்ந்த அரசாங்கம் மற்ற அரசாங்க வேலைகளிலும் அவரை பயன்படுத்திக் கொண்டது.  

அரசியலை அறவே வெறுத்தவர் கன்பூசியஸ் ஆனால் அரசியல் நிர்வாகம் அவரைத் தேடி வந்தது. ஓர் அரசாங்கம் சிறப்பாக பணியாற்றத் தேவையான கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார் அதன் மூலம் அவரது மதிப்பு கூடியது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அது அரிஸ்டாட்டில் நிறுவிய லைசியம் அகாடமியைப் போன்றதொரு கலைக்கழகமாக செயல்பட்டது. அதில் அரசாங்க நிர்வாகம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கைப் பண்புகள், ஒழுக்கம் போன்ற பாடங்களை இளையர்களுக்கு போதித்தார்.  

'அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு' என்பதே கன்பூசியஸின் அடிப்படை சித்தாந்தம். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும், சுதந்திர சிந்தனையை வலியுறுத்துவதிலும் அவரது முனைப்பைக் கண்ட சீனர்கள் அவரை தெய்வமாகவே மதிக்கத் தொடங்கினர். ஆனால் அதனை கன்பூசியஸ் விரும்பவில்லை ஏனெனில் மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. மக்கள் மத சம்பிராதாயங்களில் மூழ்கி மூடநம்பிக்கைக்கு ஆளாகின்றனர் என்றும், மக்களின் அறியாமைப் போக்குவதற்கு பதில் மதம் அவர்களை பேதைகளாக மாற்றுகிறது என்றும், மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை வெறுப்பதாக வெளிப்படையாகவே சொன்னார்

வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்றார் கன்பூசியஸ். பெரும்பாலோர் மதித்தாலும் சில அரசாங்க அதிகாரிகள் அவரை குறை கூற ஆரம்பிக்கவே அரசாங்கப் பணியிலிருந்து விலகினார் கன்பூசியஸ். பல நாடுகளில் சுற்றித் திரிந்து சென்ற இடத்திலெல்லாம் தன் சிந்தனைகளை விதைத்தார். சில குறுநில மன்னர்கள் அவரது மதிப்பை அறிந்து அவருக்கு மானியம் அளிக்க முன்வந்தனர். ஆனால் வறுமையில் வாடியபோதும் அந்த உதவிகளை ஏற்க மறுத்தார் கன்பூசியஸ். அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கெளரவிக்க விரும்பியது ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார்

ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தமது 70-ஆவது வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது கடைசிக் காலத்தை சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். தமது சிந்தனைகளையெல்லாம் ஒருங்கினைத்து "வசந்தமும் இலையுதிர்க் காலமும்" என்ற நூலை உருவாக்கினார். தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு அவர்மீது நன்மதிப்பால் அவரது கொள்கைகளை 'கன்பூசியனிஸம்' என்று கிட்டதட்ட ஒரு மதமாகவே மதிக்கத் தொடங்கினர் சீனர்கள். சீனாவில் பெளத்தம், தாவிசம், கம்யூனிசம் என்று எத்தனையோ மதங்களும் மாறுதல்களும் வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கிறது கன்பூசியனிஸம். அதற்கு காரணம் அந்த தத்துவஞானியின் உயரிய சிந்தனைகள்தான்

ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு அரசாங்கம் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்போதே சொன்னவர் கன்பூசியஸ். எல்லோருக்கும் சமவாய்ப்பும், சமதகுதியும் வழங்கப்பட வேண்டும் அரசாங்கம் கல்வியை கண்ணாக போற்றி வளர்க்க வேண்டும், இளையர்களின் சுதந்திர சிந்தனைகளை தடை செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் கன்பூசியஸ். நாம் எப்படி வள்ளுவரின் திருக்குறளைப் பெரிதாக மதித்துப் போற்றுகிறோமோ அதே போன்று சீனர்கள் கன்பூசியஸின் கருத்துகளை வேதமாகப் பின்பற்றுகின்றனர். சீனா தந்த அந்த அருந்தவப் புதல்வனின் சில சீரிய சிந்தனைகள் இதோ.....

"இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை".

"உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்".

"சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்".

இப்படிப்பட்ட அறிய பொன்மொழிகளுக்கு சொந்தக்காரர் கன்பூசியஸ். ஒரு பில்லியன் சீனர்கள் மட்டுமல்ல மற்ற நாட்டவர்களும் இன்றும் அவரை மதிப்பதற்கு காரணம் அவருடைய சிந்தனைத் தெளிவும், செயல் துணிவும்தான். இதுபோன்ற பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் ஏழ்மையில் பிறந்தவர்களுக்குகூட அந்த வானம் வசப்படும் என்பதுதான் தத்துவ மேதை கன்பூசியஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.

தத்துவஞானி அரிஸ்டாடில்


உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்க தத்துவம் அதனை முதலில் உலகுக்கு தந்தவர் சாக்ரடீஸ் அவரை தொடர்ந்து இருவர் தத்துவ உலகிற்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.  ஒருவர் சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ, மற்றவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாடில். இந்த மூவரையும்தான் கிரேக்க தத்துவ உலகின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கிறது வரலாறு.

தத்துவ மேதை அரிஸ்டாடிலை தெரிந்துகொள்வோம் கி.மு 384 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்டஹிரா என்ற நகரில் பிறந்தவர் அரிஸ்டாடில் அவரது தந்தையும் நன்கு தேர்ந்த மருத்துவருமான நிக்கோ மாக்கஸ் மாஸிடோனியாவின் மன்னன் பிலிப்ஸ்க்கு அரச மருத்துவராக செயல்பட்டவர். அந்த தொடர்பு அரிஸ்டாடிலின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றியது. தனது தந்தையிடமிருந்து உயிரியல் சம்பந்தபட்ட விசயங்களை கற்றுகொண்ட அரிஸ்டாடில் தனது 17 ஆவது வயதில் பிளேட்டோ அகாடமியில் சேர்ந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பிளேட்டோவிடம் பாடம் கற்ற அரிஸ்டாடில் குருவை மிஞ்சும் மாணவனாக இருந்தார். அவரது அறிவுக்கூர்மையை பார்த்து வியந்த பிளேட்டோ அரிஸ்டாடிலை தனது பள்ளியின் அறிவுகளஞ்சியம் என்று போற்றி மகிழ்ந்தார். அரிஸ்டாடிலின் அறிவுத்திறனை அறிந்த மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.

அலெக்ஸாண்டரும் வேறு சில முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகளும் அரிஸ்டாடிலிடம் வாழ்க்கைப்பாடங்களை கற்றுகொண்டனர். மாவீரன் அலெக்ஸாண்டர் ஒவ்வொரு தேசமாக கைப்பற்றியபோது அவற்றின் மன்னர்களையும் வீரர்களையும் நல்முறையில் நடத்தியதற்கு அரிஸ்டாடிலின் போதனைகள் முக்கிய காரணமாகும்

மன்னன் பிலிப்ஸின் மறைவிற்கு பிறகு அலெக்ஸாண்டர் அரியனை ஏரியதும் ஏதென்ஸுக்கு திரும்பிய அரிஸ்டாடில் அங்கு தனது சொந்த பள்ளியை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 50. தத்துவங்களை போதித்த அந்த பள்ளி லைஸியம் அகாடமி என்று அழைக்கப்பட்டது. தன் வாழ்நாளில் கிட்டதட்ட 400 புத்தகங்கள் எழுதினார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலனவற்றை படித்து மகிழும் பாக்கியம் நமக்கு இல்லை.

அரிஸ்டாடில் விட்டுவைக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு விலங்கியல், தாவரவியல், பெளதீகம், அரசியல் , பொருளியல், கவிதை, தத்துவம் என பல்வேறு துறைகளில் சிந்தித்தார். அந்த துறைகள் அதுவரை கண்டிராத புதிய கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் அறிமுகபடுத்தினார்.

அரிஸ்டாடிலை சிந்தனையாளர், அறிவுஜீவி, விஞ்ஞானி என்றெல்லாம் உலகம் போற்றியது. மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை என்று வருணிக்கிறது வரலாறு. மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்ததும் அரிஸ்டாடில் மீது சந்தேகம் கொள்ள தொடங்கினர் கிரேக்க மக்கள் சாக்ரடீஸ்க்கு நேர்ந்த கதியே தனக்கும் ஏற்படும் என்று அஞ்சிய அரிஸ்டாடில் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஜால்ஸிஸ் என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார்சுமார் ஓராண்டு கழித்து அங்கேயே அவர் வயிற்றுக்கோளாறு காரணமாக கி.மு 322 ஆம் ஆண்டு தமது 62 ஆம் வயதில் காலமானார்.    

தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”

 “ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்புகொள்ள முடியாது” 

கடவுளைப்போல பிறர் குற்றங்களை பலமுறை மன்னிக்க பழக வேண்டும்”

இவை அரிஸ்டாடில் என்ற தத்துவமேதையின் சில சிந்தனைகள், அரிஸ்டாடில் வாழ்ந்து 2000 ஆண்டுகளுக்குமேல் ஓடி மறைந்திருந்தாலும் அந்த தத்துவமேதையின் சிந்தனைகள் இன்றைய நவீன உலக்குக்கும் பொருந்துவனவாக உள்ளன. தன் வாழ்க்கை முழுவதையும் கற்பதிலும் கற்பிப்பதிலும் செலவிட்டார் அந்த தத்துவமேதை.  

அரிஸ்டாடில் போன்றவர்கள் வரலாற்றில் அபூர்வமாகத்தான் உதிக்கின்றனர். அதனால் அவருக்கு அந்த தத்துவம் எனும் வானம் வசப்பட்டதில் ஆச்சரியமில்லைதான். ஆனால் அப்படிபட்ட மாமேதைகூட வாழ்நாள் முழுவதும் தான் கற்பதை கைவிடவில்லை.