Thursday, 20 September 2012

தத்துவஞானி அரிஸ்டாடில்


உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்க தத்துவம் அதனை முதலில் உலகுக்கு தந்தவர் சாக்ரடீஸ் அவரை தொடர்ந்து இருவர் தத்துவ உலகிற்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.  ஒருவர் சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ, மற்றவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாடில். இந்த மூவரையும்தான் கிரேக்க தத்துவ உலகின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கிறது வரலாறு.

தத்துவ மேதை அரிஸ்டாடிலை தெரிந்துகொள்வோம் கி.மு 384 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்டஹிரா என்ற நகரில் பிறந்தவர் அரிஸ்டாடில் அவரது தந்தையும் நன்கு தேர்ந்த மருத்துவருமான நிக்கோ மாக்கஸ் மாஸிடோனியாவின் மன்னன் பிலிப்ஸ்க்கு அரச மருத்துவராக செயல்பட்டவர். அந்த தொடர்பு அரிஸ்டாடிலின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றியது. தனது தந்தையிடமிருந்து உயிரியல் சம்பந்தபட்ட விசயங்களை கற்றுகொண்ட அரிஸ்டாடில் தனது 17 ஆவது வயதில் பிளேட்டோ அகாடமியில் சேர்ந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பிளேட்டோவிடம் பாடம் கற்ற அரிஸ்டாடில் குருவை மிஞ்சும் மாணவனாக இருந்தார். அவரது அறிவுக்கூர்மையை பார்த்து வியந்த பிளேட்டோ அரிஸ்டாடிலை தனது பள்ளியின் அறிவுகளஞ்சியம் என்று போற்றி மகிழ்ந்தார். அரிஸ்டாடிலின் அறிவுத்திறனை அறிந்த மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.

அலெக்ஸாண்டரும் வேறு சில முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகளும் அரிஸ்டாடிலிடம் வாழ்க்கைப்பாடங்களை கற்றுகொண்டனர். மாவீரன் அலெக்ஸாண்டர் ஒவ்வொரு தேசமாக கைப்பற்றியபோது அவற்றின் மன்னர்களையும் வீரர்களையும் நல்முறையில் நடத்தியதற்கு அரிஸ்டாடிலின் போதனைகள் முக்கிய காரணமாகும்

மன்னன் பிலிப்ஸின் மறைவிற்கு பிறகு அலெக்ஸாண்டர் அரியனை ஏரியதும் ஏதென்ஸுக்கு திரும்பிய அரிஸ்டாடில் அங்கு தனது சொந்த பள்ளியை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 50. தத்துவங்களை போதித்த அந்த பள்ளி லைஸியம் அகாடமி என்று அழைக்கப்பட்டது. தன் வாழ்நாளில் கிட்டதட்ட 400 புத்தகங்கள் எழுதினார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலனவற்றை படித்து மகிழும் பாக்கியம் நமக்கு இல்லை.

அரிஸ்டாடில் விட்டுவைக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு விலங்கியல், தாவரவியல், பெளதீகம், அரசியல் , பொருளியல், கவிதை, தத்துவம் என பல்வேறு துறைகளில் சிந்தித்தார். அந்த துறைகள் அதுவரை கண்டிராத புதிய கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் அறிமுகபடுத்தினார்.

அரிஸ்டாடிலை சிந்தனையாளர், அறிவுஜீவி, விஞ்ஞானி என்றெல்லாம் உலகம் போற்றியது. மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை என்று வருணிக்கிறது வரலாறு. மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்ததும் அரிஸ்டாடில் மீது சந்தேகம் கொள்ள தொடங்கினர் கிரேக்க மக்கள் சாக்ரடீஸ்க்கு நேர்ந்த கதியே தனக்கும் ஏற்படும் என்று அஞ்சிய அரிஸ்டாடில் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஜால்ஸிஸ் என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார்சுமார் ஓராண்டு கழித்து அங்கேயே அவர் வயிற்றுக்கோளாறு காரணமாக கி.மு 322 ஆம் ஆண்டு தமது 62 ஆம் வயதில் காலமானார்.    

தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”

 “ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்புகொள்ள முடியாது” 

கடவுளைப்போல பிறர் குற்றங்களை பலமுறை மன்னிக்க பழக வேண்டும்”

இவை அரிஸ்டாடில் என்ற தத்துவமேதையின் சில சிந்தனைகள், அரிஸ்டாடில் வாழ்ந்து 2000 ஆண்டுகளுக்குமேல் ஓடி மறைந்திருந்தாலும் அந்த தத்துவமேதையின் சிந்தனைகள் இன்றைய நவீன உலக்குக்கும் பொருந்துவனவாக உள்ளன. தன் வாழ்க்கை முழுவதையும் கற்பதிலும் கற்பிப்பதிலும் செலவிட்டார் அந்த தத்துவமேதை.  

அரிஸ்டாடில் போன்றவர்கள் வரலாற்றில் அபூர்வமாகத்தான் உதிக்கின்றனர். அதனால் அவருக்கு அந்த தத்துவம் எனும் வானம் வசப்பட்டதில் ஆச்சரியமில்லைதான். ஆனால் அப்படிபட்ட மாமேதைகூட வாழ்நாள் முழுவதும் தான் கற்பதை கைவிடவில்லை.




No comments:

Post a Comment